நடிகர் ராகவா லோரன்ஸ் நடிப்பில் தயாராகி வரும் ‘சந்திரமுகி 2’ எனும் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இவ்விழாவில் பங்குபற்றிய தயாரிப்பாளர் லைக்கா சுபாஷ்கரன், ராகவா லாரன்ஸின் அறக்கட்டளைக்கு ஒரு கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கினார்.
இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் 65 ஆவது படமாக தயாராகி வரும் திரைப்படம் ‘சந்திரமுகி 2’ இதில் ராகவா லாரன்ஸ், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், ‘வைகைப்புயல்’ வடிவேலு, மகிமா நம்பியார், லட்சுமிமேனன், சிருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ் மேனன், சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருதினை வென்ற இசையமைப்பாளர் எம் எம் கீரவாணி இசையமைத்திருக்கிறார். எக்சன் கொமடி ஹாரர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது.
விநாயகர் சதுர்த்தி தினமான செப்டம்பர் 15ம் திகதியன்று வெளியாகவிருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை புறநகரில் அமைந்திருக்கும் தனியார் பொறியியல் கல்லூரியின் கலையரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவில் பட குழுவினருடன் தயாரிப்பாளர் லைக்கா சுபாஷ்கரன், திருமதி சுபாஷ்கரன், சுபாஷ்கரனின் தாயார் ஞானாம்பிகை ஆகியோரும் பங்குபற்றினர்.
லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தமிழ் குமரன் பேசுகையில், ” ராகவா லோரன்ஸின் அறக்கட்டளைக்காக லைக்கா தயாரிப்பாளர் சுபாஸ்கரன் ஒரு கோடி ரூபாய் நன்கொடையாக வழங்குகிறார். ” என்றார்.
ராகவா லோரன்ஸ் பேசுகையில், ” மிகவும் சந்தோஷம். என்னுடைய மாணவர்களின் நிகழ்ச்சியை பார்த்த பிறகு சிலர் உதவி செய்வார்கள். ஆனால் நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருக்கும் போதே.. அதுவும் ஒரு கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கிய சுபாஷ்கரனுக்கு நன்றி. வாழ்கிறவன் மனிதன். வாழ வைப்பவன் கடவுள் என்று சொல்வார்கள். எங்கள் மாணவர்களை வாழ வைத்த சுபாஸ்கரன் எங்களுக்கு கடவுள்.
சுபாஷ்கரன் சார் வழங்கியிருக்கும் நன்கொடையை இந்த மாணவர்கள் தங்குவதற்கும், நடன பயிற்சி மேற்கொள்வதற்கு வசதியாக, ஒரு இடத்தை வாங்கி, அவர்களுக்கான கட்டிடம் ஒன்றை கட்டி, அதற்கு உங்களின் தாயாரின் பெயரை சூட்டுவோம். இவை அனைத்தும் இன்னும் ஒரு வருடத்தில் நிறைவேறும்.” என்றார்.
இதனிடையே ராகவா லோரன்ஸின் ஆதரவுடன் இயங்கி வரும் மாற்றுத்திறனாளிகள் கொண்ட நடன குழுவினருடன் மேடையில் சம்மணமிட்டு அமர்ந்து, அவர்களுக்கு தன் ஆதரவையும், அன்பையும் லைக்கா சுபாஷ்கரன் தெரிவித்த போது அரங்கமே ஏழுந்து நின்று கரவொலி எழுப்பி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.