இலங்கைக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையில் தம்புள்ளை ரங்கிரி விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (27) நடைபெற்ற முதலாவது இளையோர் (19 வயதுக்குட்பட்ட) சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட்களால் இலங்கை அமோக வெற்றியீட்டியது.
கருக்க சன்கேத்தின் (5 விக்கெட்கள்) துல்லியமான பந்துவீச்சும், தினுர கலுபஹனவின் (3 விக்கெட்கள், அரைச் சதம்) அபார சகலதுறை ஆட்டமும் ரவிஷான் நெத்சர, சுப்புன் வடுகே, ஷாருஜன் சண்முகநாதன் ஆகியோரின் திறமையான துடுப்பாட்டங்களும் இலங்கை இளையோர் அணியின் வெற்றியில் பிரதான பங்காற்றின.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் இளையோர் அணி 49.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 223 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில் நெதன் சோலி 75 ஓட்டங்களையும் ஏட்ரியன் வெய்ர் 32 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் கருக்க சன்கேத் 48 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் தினுர கலுபஹன 45 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை இளையோர் அணி 43.1 ஓவர்களில் 4 விக்கெட்களை மாத்திரம் இழந்து 224 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியீட்டியது.
இதில் ரவிஷான் நெத்சர 65 ஓட்டங்களையும் சுப்புன் வடுகே 56 ஓட்டங்களையும் தினுர கலுபஹன ஆட்டம் இழக்காமல் 52 ஓட்டங்களையும் ஷாருஜன் சண்முகநாதன் ஆட்டம் இழக்காமல் 20 ஓட்டங்களையும் பெற்றனர்.
ரவிஷான் நெத்சர, சுப்புன் வடுகே ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 134 ஓட்டங்களையும் தினுர கலுபஹன, ஷாருஜன் சண்முகநாதன் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் 76 ஓட்டங்களையும் பகிர்ந்தனர்.
பந்துவீச்சில் நெதன் எட்வேர்ட் 43 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினர்.