கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நிறைவுக்கு வந்த 47ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகளில் மேல் மாகாணம் 115 தங்கம், 78 வெள்ளி, 89 வெண்கலப் பதக்கங்களுடன் ஒட்டுமொத்த சம்பியனானது.

தேசிய விளையாட்டுப் போட்டிகளில் மேல் மாகாணம் சமபியனானது இது 46ஆவது தடவையாகும்.
மத்திய மாகாணம் 39 தங்கம், 45 வெள்ளி, 50 வெண்கலப் பதக்கங்களுடன் 2ஆம் இடத்தையும் தென் மாகாணம் 30 தங்கம், 37 வெள்ளி, 45 வெண்கலப் பதக்கங்களுடன் 3ஆம் இடத்தையும் பெற்றன.
வட மேல் மாகாணம் (26 தங்கம், 35 வெள்ளி, 39 வெண்கலம்), வட மத்திய மாகாணம் (17 – 15 – 34), சப்ரகமுவ (13 – 22 – 51), ஊவா மாகாணம் (10 – 13 – 33). கிழக்கு மாகாணம் (7 – 9 – 8), வட மாகாணம் (5 – 9 – 2) ஆகியன முறையே 4, 5, 6, 7, 8, 9ஆம் இடங்களைப் பெற்றன.
தேசிய விளையாட்டுப் போட்டிகளின் கடைசி அம்சமான மெய்வல்லுநர் போட்டிகளில் ஆண்களுக்கான 400 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டியை 50.59 செக்கன்களில் நிறைவு செய்து வெற்றியீட்டி 1101 சர்வதேச தர புள்ளிகளைப் பெற்ற மத்திய மாகாண வீரர் கே.எம்.டி. தர்ஷன அதிசிறந்த ஆண் மெய்வல்லுநராகத் தெரிவானார்.
பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியை 52.80 செக்கன்களில் நிறைவு செய்து வெற்றியீட்டி 1096 சர்வதேச தர புள்ளிகளைப் பெற்ற நடீஷா ராமநாயக்க அதிசிறந்த பெண் மெய்வல்லுநராகத் தெரிவானார்.
ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியை 10.65 செக்கன்களில் நிறைவுசெய்து தங்கப் பதக்கம் வென்ற சப்ரகமுவ மாகாண வீரர் வை.சி.எம். யோதசிங்க அதிவேக மனிதனாகவும் பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியை 12.25 செக்கன்களில் நிறைவுசெய்து தங்கப் பதக்கம் வென்ற மத்திய மாகாண வீராங்கனை எப். ஷபியா யாமிக் அதிவேக பெண்ணாகவும் தெரிவாகினர்.
புதிய போட்டி சாதனைகள்
மெய்வல்லுநர் போட்டிகளில் கடைசி நாளான சனிக்கிழமை 3 புதிய போட்டி சாதனைகள் நிலைநாட்டப்பட்டது. இதற்கு அமைய 47ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகளின் மெய்வல்லுநர் நிகழ்ச்சிகளில் மொத்தம் 5 புதிய சாதனைகள் நிலைநாட்டப்பட்டன.
சனிக்கிழமை நடைபெற்ற ஆண்களுக்கான முப்பாய்ச்சலில் மேல் மாகாண வீரர் எல்.சி. குமாரசிறி 16.23 மீற்றர் தூரம் பதிவு செய்து புதிய போட்டி சாதனை நிலைநாட்டினார்.
ஆண்களுக்கான 110 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டியை 14.16 செக்கன்களில் நிறைவுசெய்த மேல் மாகாண வீரர் ஐ. லக்விஜய, ஒரு நாளுக்கு முன்னர் நிலைநாட்டிய தனது சொந்த சாதனையை (14.18 செக்.) முறியடித்த புதிய போட்டி சாதனை நிலைநாட்டினார்.
பெண்களுக்கான 4 தர 400 மீற்றர் தொடர் ஓட்டப் போட்டியை 3 நிமிடங்கள், 41.96 செக்கன்களில் நிறைவு செய்த தென் மாகாண அணி (என். லக்மாலி, நிமாலி லியனஆராச்சி), கயன்தினா அபேரட்ன, நடீஷா ராமநாயக்க) புதிய போட்டி சாதனை நிலைநாட்டியது.
இந்த சாதனையுடன் மெய்வல்லுநர் போட்டிகளில் மொத்தமாக 5 புதிய போட்டி சாதனைகள் பதிவாகின.
போட்டியின் ஆரம்ப நாளான வியாழக்கிழமை (24) நடைபெற்ற பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் 3.50 மீற்றர் உயரம் தாவிய யாழ். பல்கலைக்கழக வீராங்கனை நேசராசா டக்சிதா இம்முறை முதலாவது போட்டி சாதனையை நிலைநாட்டியிருந்தார்.
அதே தினத்தன்று பெண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் வி. லக்மாலி (44.59 மீற்றர்) புதிய போட்டி சாதனையைப் படைத்திருந்தார்.
இரட்டை தங்கம் வென்றவர்கள்
பெண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் வத்சலா ஹேரத் (10000 மீற்றர, 5000 மீற்றர்), நடீஷா ராமநாயக்க (200 மீற்றர், 400 மீற்றர்), கயன்திகா அபேரட்ன (800 மீற்றர், 1500 மீற்றர்) ஆகியோர் தலா 2 தங்கப் பதக்கங்களை சுவீகரித்தனர்.
கயன்திகா, நடீஷா ஆகிய இருவரும் தொடர் ஓட்டப் போட்டியிலும் தங்கம் வென்ற அணியில் இடம்பெற்றமை விசேட அம்சமாகும்.
கடைசி நாளான சனிக்கிழமை (26) காலை நடைபெற்ற ஆண்களுக்கான 10000 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெற்றி பெறுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மத்திய மாகாண வீரர் கே. சண்முகேஸ்வரன் (31:37.43) வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார்.
அப்போட்டியில் சப்ரகமுவ மாகாண வீரர் பி. மதுரங்க (31:37.06) தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.
ஒவ்வொரு வகையான விளையாட்டுப் போட்டிகளிலும் ஆண், பெண் இருபாலாரிலும் அதி சிறந்த போட்டியாளர்கள் தெரிவுசெய்யப்பட்டு கிண்ணங்கள் வழங்கப்பட்டன.
நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு பிரதான பிசில்களை வழங்கினார்.