ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் அமைந்துள்ள தேசிய மெய்வல்லுநர் நிலைய விளையாட்டரங்கில் புதன்கிழமை (23) நடைபெற்ற உலக மெய்வல்லுநர் சம்பயின்ஷிப்பில் பெண்களுக்கான ஈட்டி எறிதலில் இலங்கையின் டில்ஹானி லேக்கம்கே முதல் சுற்றுடன் வெளியேறினார்.
இப் போட்டிக்கான ஏ பிரிவு தகுதிகாண் சுற்றில் பங்குபற்றிய டில்ஹானி லேக்கம்கே, 55.89 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து 14ஆம் இடத்தைப் பெற்றார்.
தகுதிகாண் மட்டத்திற்கான தூரம் 61.50 மீற்றர்களாக நிர்ணயிக்கப்பட்டது. எனினும் ஏ மற்றும் பி ஆகிய இரண்டு பிரிவுகளிலும் முதல் 12 அதிசிறந்த ஆற்றல் வெளிப்பாட்டாளர்கள் இறுதிச் சுற்றில் பங்குபற்ற தகுதிபெற்றனர்.
ஏ பிரிவில் 14ஆம் இடத்தைப் பெற்ற டில்ஹானி, இரண்டு பிரிவுகளுக்குமான ஒட்டுமொத்த நிலையில் 22ஆம் இடத்தைப் பெற்றார். இப் போட்டியில் மொத்தமாக 34 வீராங்கனைகள் பங்குபற்றினர்.
ஏ பிரிவில் போட்டியிட்ட லெட்வியா வீராங்கனை லீனா முஸே சிர்மா 63.50 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து முதலாம் இடத்தைப் பெற்றார்.
பி பிரிவில் அவுஸ்திரேலிய வீராங்கனை லிட்ல் மெக்கென்ஸி (63.45 மீற்றர்) முதலாம் இடத்தைப் பெற்றார்.
12 வீராங்கனைகள் பங்குபற்றும் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டி வெள்ளிக்கிழமை (25) நடைபெறவுள்ளது.
ஆண்களுக்கான 4 x 400 மீற்றர் தொடர் ஓட்டம்
சனிக்கிழமை (26) நடைபெறவுள்ள ஆண்களுக்கான 4 x 400 மீற்றர் தொடர் ஓட்ட தகுதிகாண் சுற்றில் இலங்கை அணியினர் பங்குபற்றவுள்ளனர்.
இலங்கை தொடர் ஓட்ட குழாத்தில் காலிங்க குமாரகே, அருண தர்ஷன, பபாசர நிக்கு, தினுக்க தேஷான், ராஜித்த ராஜகருண, பசிந்து கொடிகார ஆகியோர் இடம்பெறுகின்றனர்.
இப் போட்டியில் இலங்கை பதிவுசெய்துள்ள அதிசிறந்த நேரப் பெறுதி 3 நிமிடங்கள் 01.56 செக்கன்களாகும்.
ஆண்களுக்கான 4 x 400 மீற்றர் தொடர் ஓட்டப் போட்டியில் பங்குபற்றவுள்ள 17 நாடுகளின் அதிசிறந்த நேரப் பெறுதிகளின் அடிப்படையில் இலங்கை 15ஆவது இடத்திலும் நடப்பு பருவகாலத்திற்கான அதிசிறந்த நேரப் பெறுதிகளின் பிரகாரம் அமெரிக்காவுக்கு அடுத்ததாக இலங்கை 2ஆம் இடத்திலும் இருக்கிறது.