தாய்லாந்தின் தலைநகர் பாங்கொங்கில் அமைந்துள்ள நிம்புத்ர் உள்ளக அரங்கில் நடைபெற்றுவரும் சர்வதேச கூடைப்பந்தாட்ட சங்கங்களின் சம்மேளன (FIBA) மகளிர் ஆசிய கிண்ண பி பிரிவு கூடைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் இலங்கை 2ஆவது தோல்வியைத் தழுவியது.
ஜோர்தானுக்கு எதிராக திங்கட்கிழமை (14) நடைபெற்ற பி குழு போட்டியில் 41 – 82 என்ற புள்ளிகள் அடிப்படையில் இலங்கை தோல்வி அடைந்தது.
கஸக்ஸ்தானுக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியில் 34 – 61 என்ற புள்ளிகள் அடிப்படையில் தோல்வி அடைந்த இலங்கை, இரண்டாவது போட்டியில் மிக மோசமாக விளையாடி தோல்வி அடைந்தது.
எதிர்த்தாடல், தடுத்தாடல், பந்து பரிமாற்றம் அனைத்திலும் இலங்கை விராங்களைகள் தவறுகளை இழைத்தவண்ணம் இருந்தனர்.
போட்டியின் முதலாவது ஆட்ட நேர பகுதியில் ஜோர்தானுக்கு ஓரளவு சவால் விடுத்து இலங்கை விளையாடியது. ஆனால் அப் பகுதியை 15 – 8 என்ற புள்ளிகள் அடிப்படையில் ஜோர்தான் தனதாக்கிக்கொண்டது.
அடுத்த 2 ஆட்ட நேர பகுதிகளிலும் ஜோர்தான் விராங்கனைகளின் வேகத்திற்கும் விவேகத்திற்கும் இலங்கை வீராங்கனைளால் ஈடுகொடுக்க முடியாமல் போனது.
இரண்டாவது ஆட்ட நேர பகுதியில் 26 – 12 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்ற ஜோர்தான் இடைவேளையின்போது 41 – 20 என்ற புள்ளிகள் அடிப்படையில் முன்னிலை அடைந்தது.
இடைவெளைக்குப் பின்னர் ஆட்டம் தொடர்ந்தபோது 3ஆவது ஆட்ட நேர பகுதியிலும் 26 – 11 என்ற புள்ளிகள் அடிப்படையில் ஜோர்தான் இலகுவாக வெற்றிபெற்றது.
கடைசி ஆட்ட நேர பகுதியில் இலங்கை சற்று திறமையாக விளையாடிய போதிலும் அப் பகுதியிலும் 15 – 11 என ஜோர்தான் வெற்றிபெற்று ஒட்டுமொத்த நிலையில் 82 – 41 என்ற புள்ளிகள் அடிப்படையில் அமோக வெற்றியீட்டியது.
இலங்கை சார்பாக நிர்மா சசன்தி சமரசிங்க 11 புள்ளிகளையும் பாத்திமா லுப்னா மெஹ்தாப் மோசெத், பெனிக்கா மதுஷினி ஆகியோர் தலா 6 புள்ளிகளையும் அணித் தலைவி அஞ்சலி ஏக்கநாயக்க 5 புள்ளிகளையும் பெற்றனர்.
ஜோர்தான் சார்பாக ஆய்ஷா மாரி ஷெப்பர்ட் 19 புள்ளிகளையும் லிலியானா அபு ஜிபாரா 14 புள்ளிகளையும் பெற்றனர்.