இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் (FFSL) மீதான இடைக்காலத் தடையை நீக்கிக்கொள்வதற்கு FIFA பேரவை பணியகத்தால் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து நிபந்தனைகளுக்கும் FFSL கவனம் செலுத்த வேண்டும் என FIFA கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளது.
FFSL நிர்வாக செயற்பாடுகளைக் கவனிக்கவென விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழுவின் தலைவர் ஏ.ஜி.சி. தேஷப்ரியவுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே FIFA இதனைக் குறிப்பிட்டுள்ளது.
மேலும் அந்தக் கடிதத்தில் தெட்டத்தெளிவாக ஒரு விடயத்தை FIFA குறிப்பிட்டுள்ளது.
அதாவது, தங்களது முந்தைய தகவல்தொடர்புகளில் குறிப்பிட்டுள்ளவாறு, 2023 ஜனவரி 21ஆம் திகதியன்று FIFA பேரவை பணியகத்தால் நிர்ணயிக்கப்பட்ட அனைத்து நிபந்தனைகளுக்கும் FFSL அதன் தேர்தல் செயற்பாட்டில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்த விரும்புவதாக அக் கடிதத்தில் FIFA குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் மீதான இடைக்காலத் தடையை நீக்குவதற்கான கோரிக்கையை சம்பந்தப்பட்ட FIFA தீர்மானிக்கும் அமைப்பிடம் சமர்ப்பிக்குமாறும் FIFA கோரியுள்ளது.
அதேவேளை, அதிவிசேட கூட்டத்தில் கையாளப்படவேண்டிய மற்ற அனைத்து விடயங்களையும் FFSL நிர்வாகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மூவர் கொண்ட இடைக்கால குழுவால் ஒத்திவைக்கவேண்டும் அல்லது நிறுத்தி வைக்க வேண்டும் அல்லது நேரடியாக கையாள வேண்டும் என FIFA மீண்டும் பரிந்துரைத்துள்ளது.
‘மேலும் 2023 அக்டோபரில் 2026 உலகக் கிண்ண தகுதிகாண் சுற்று நடைபெறுவதைக் கருத்தில்கொண்டு FFSL மிக விரைவில் அதன் தேர்தலை நடத்த விரும்புவதை நாங்கள் அறிவோம். ஆனால், 2023 செப்டெம்பர் 30ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல் நடத்தப்படவேண்டும்.
இதனை முன்னிட்டு 2022 செப்டெம்பர் மாதம் நடத்தப்பட்ட FFSL பொதுச் சபைக் கூட்டத்தின்போது நியமிக்கப்பட்ட தேர்தல் குழு (குழுக்கள்) எதிர்வரும் தேர்தல் செயற்பாடுகள் அனைத்தையும் பொறுப்பேற்கும். அதிவிசேட கூட்டத்தின்போது இது குறித்து ஆராய்வதற்கான அவசியம் இல்லை. ஒருவேளை, தேர்தல் குழுவினரும் அவர்களுக்கு பதிலானவர்களும் அடுத்துவரும் தேர்தல் செயற்பாடுகளில் பங்கேற்க மாட்டார்கள் என்பது திட்டவட்டமாக உறுதிசெய்யப்பட்டால், அவர்களுக்கு பதிலாக யாரேனும் நியமிக்கப்படுவது தொடர்பாக பொதுச் சபைக்கு முறையாக அறிவிப்பது மிகவும் முக்கியமாகும்’ என மூவரடங்கிய செயற்குழுத் தலைவர் ஏ.ஜி.சி. தேஷப்பரியவுக்கு FIFA வினால் அனுப்பிவைப்பட்டுள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘இறுதியாக, FIFA மற்றும் AFC க்கு தெரியப்படுத்தப்பட்டவாறு தேர்தல் வழிகாட்டித் திட்டம் 2022 செப்டெம்பரில் ஏற்றுக்கொள்ளப்பட்ட FFSL விதிகள் மற்றும் தேர்தல் விதிமுறைகளில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட சாதாரண வழிமுறையை பின்பற்றலாம் என நாங்கள் கருதுகிறோம்.
‘எனவே பின்வரும் முக்கிய வழிமுறைகளை FFSL பின்பற்றுமாறு நாங்கள் கடுமையாக பரிந்துரைக்கிறோம்.’
1. ஆகஸ்ட் 14க்கு முன்னர் FFSL பொதுச் சபைக் கூட்டத்திற்கான அறிவிப்பு அனுப்பப்படவேண்டும்.
2. வேட்பாளர்களின் பட்டியலை FFSLஇடம் சமர்ப்பிக்கும் கடைசித் திகதி ஆகஸ்ட் 19
3. வேட்பாளர்களின் உத்தியோகபூர்வ பட்டியலை சமர்ப்பிக்கும் கடைசி திகதி ஆகஸ்ட் 29
4. தேர்தலுக்கான பொதுக்கூட்டம் – செப்டெம்பர் 29