ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் இலங்கையில் அடுத்த வாரம் நடைபெறவுள்ளது.
தமது சொந்த நாட்டில் நடைபெறவேண்டிய இத் தொடரை இலங்கையில் முன்னின்று நடத்துவதற்கு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளதை மகிழ்ச்சியுடன் அறிவிப்பதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்தது.
லங்கா பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டி நிறைவடைந்ததும் ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான கிரிக்டெக் தொடர் ஹம்பாந்தோட்டையிலும் கொழும்பிலும் நடைபெறவுள்ளது.
இத் தொடரில் விளையாடவுள்ள ஆப்கானிஸ்தான் அணியினர் இலங்கை வந்தடைந்துள்ளனர்.
இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதல் இரண்டு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் ஹம்பாந்தோட்டையில் ஆகஸ்ட் 22, 24ஆம் திகதிகளிலும் 3ஆவதும் கடைசியுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்பில் ஆகஸ்ட் 24ஆம் திகதியும் நடைபெறவுள்ளன.
இத் தொடர் இலங்கையில் நடத்தப்படுவது தொடர்பாக கருத்து வெளியிட்ட ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி டி சில்வா, இந்தத் தொடரை நடத்துவதற்கு இலங்கையை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை தேர்ந்தெடுத்தது குறித்து நாங்கள் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். கிரிக்கெட் உலகில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் வென்றெடுத்துள்ள நம்பிக்கையை இது எடுத்துக்காட்டுகிறது. மேலும் இத்தகைய போட்டிகளை நடத்துவதற்கு பொறுத்தமான நாடு இலங்கை என்பது இதன் மூலம் வெளிப்படுகிறது. இந்த தொடரை நடத்துவதற்கு உரிய பாதுகாப்பு சூழலை ஏற்படுத்திக் கொடுப்போம் என உறுதியளிக்கிறோம்’ என குறிப்பிட்டார்.