தற்போது உபாதையால் அவதியுற்று வரும் இலங்கையின் குறுந்தூர ஓட்ட வீரரான யுப்புன் அபேகோன், இந்த ஆண்டு நடைபெறவுள்ள உலக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.
உலக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் பங்கேற்பதை தவிர்த்துவிட்டு, ஆசிய விளையாட்டு விழாவில் பங்கேற்பதற்கு எண்ணியுள்ளதாகவும் இவ்விடயம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாகவும் தெற்காசிய அதிவேக ஓட்ட வீரரான யுப்புன் அபேகோன் குறிப்பிட்டுள்ளார்.
“கடந்த சில மாதங்கள் எனக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மிகவும் கடினமாக இருந்தது. நான் உபாதையிலிருந்து மெதுவாக குணமடைந்து வருகின்றேன்.
உலக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் அல்லது ஆசிய விளையாட்டு விழா ஆகிய இரண்டு போட்டிகளில் ஒன்றைத் தெரிவு செய்ய வேண்டியுள்ளது.
எனவே, உலக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டியிலிருந்து விலக முடிவு செய்துள்ளேன் என்பதை அதிகாரிகளுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். செப்டெம்பரில் நடைபெறும் ஆசிய விளையாட்டு விழாவில் எனது சிறந்த ஆட்டத்த திறனை வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்துவேன்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டில் அவர் பங்கேற்றிருந்த முதலாவது 100 மீற்றர் ஓட்டப் போட்டியில், யுப்புன் அபேகோன் உபாதைக்குள்ளானதால், இவ்வருடம் அவர் பங்கேற்கவிருந்த பல ஓட்டப் போட்டிகளிலிருந்து அவர் விலக வேண்டியிருந்தது.
100 மீற்றர் ஓட்டப் போட்டியை 10 செக்கன்களுக்குள் முடித்த முதல் மற்றும் ஒரேயொரு தெற்காசிய வீரரான யுபுன் அபேகோன், பேர்மிங்ஹாம் 2022 பொதுநலவாய விளையாட்டு விழாவின் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.