சிட்டி லீக் தலைவர் கிண்ண கால்பந்தாட்டத்தில் அற்புதமான ஆற்றல்களை வெளிப்படுத்தி பலம்வாய்ந்த அணிகளை அதிர்ச்சி தோல்வி அடையச் செய்த மாளிகாவத்தை யூத் கழகம் 27 வருடங்களின் பின்னர் பிரதான கால்பந்தாட்டப் போட்டி ஒன்றில் முதல் தடவையாக இறுதி ஆட்டத்தில் விளையாட தகுதிபெற்றுள்ளது.
1996ஆம் ஆண்டு நடைபெற்ற விஜய குமாரதுங்க ஞாபகார்த்த கிண்ண கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியிலேயே மாளிகாவத்தை யூத் கழகம் இறுதிப் போட்டி ஒன்றில் கடைசியாக விளையாடியிருந்தது.
சிட்டி லீக் தலைவர் கிண்ண கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் இந்த வருடம் முதல் தடவையாக விளையாடும் மாளிகாவத்தை யூத் கழகம் லீக் சுற்றுடன் வெளியேறும் எனவும் கலம்போ எவ். சி. ஜாவா லேன், நடப்பு சம்பியன் சோண்டர்ஸ் ஆகிய மூன்று அணிகளில் இரண்டு அணிகளே இறுதிப் போட்டிக்கு முன்னேறும் எனவும் எதிர்வு கூறப்பட்டது.
அதற்கேற்றாற்போல் லீக் சுற்றில் முதல் 3 போட்டிகளில் மொரகஸ்முல்ல, ஜாவா லேன், கலம்போ எவ்.சி. அகிய அணிகளிடம் தோல்வி அடைந்த மாளிகாவத்தை யூத் போட்டியிலிருந்து வெளியேறக்கூடிய ஆபத்தில் இருந்தது.
ஆனால், நடப்பு சம்பியன் சோண்டர்ஸ் அணியை கடைசி லீக் போட்டியில் அதிர்ச்சி தோல்வி அடையச் செய்த மாளிகாவத்தை யூத் நீக்கல் போட்டியில் விளையாடத் தகுதிபெற்றது.
மொரகஸ்மல்ல அணியுடனான நீக்கல் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்ததைத் தொடர்ந்து பெனல்டி முறையில் வெற்றிபெற்ற மாளிகாவத்தை யூத், 2ஆவது தகுதிகாண் போட்டியில் முற்றிலும் எதிர்பாராத விதமாக ஜாவா லேன் கழகத்தை 1 – 0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றிகொண்டு இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.
சிட்டி லீக் மைதானத்தில் கடந்த வார இறுதியில் நடைபெற்ற 2ஆவது தகுதிகாண் போட்டியில் இரண்டு அணிகளும் சம அளவில் மோதிக்கொண்டதால் அப் போட்டி பெனல்டிகளில் தீர்மானிக்கப்படும் என எண்ணவைத்தது.
ஆனால், போட்டியின் 74ஆவது நிமிடத்தில் மாளிகாவத்தை யூத் அணியின் இளம் வீரர் எம்.கே.எம். சர்பான், பந்தை சாமர்த்தியமாக நகர்த்தியவாறு ஜாவா லேன் அணியின் 3 வீரர்களைக் கடந்து சென்று அலாதியாக போட்ட கோல் வெற்றி கோலாக அமைந்தது.
மாளிகாவத்தை யூத் கழகத்தின் வளர்ச்சிக்கும் உயர்ச்சிக்கும் அயராது உழைத்து வருபவர் அக் கழகத்தின் தலைவர் சுப்பிரமணியம் சிவகுமார் என்றால் மிகையாகாது.
அத்துடன் முன்னாள் தேசிய வீரர் எம்.என்.எம். இஸ்ஸதீனின் திறமையான பயிற்சியும் மாளிகாவத்தை யூத் கழகத்தை வெகுவாக முன்னேற்றம் அடையச் செய்துள்ளது.
மாளிகாவத்தை யூத் கழகத்திற்கும் கலம்போ எவ்.சி.க்கும் இடையிலான சிட்டி லீக் தலைவர் கிண்ண கால்பந்தாட்ட இறுதிப் போட்டி ஆகஸ்ட் 6ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
கலம்போ எவ்.சி. சம்பியனாவதற்கு அனுகூலமானதும் பலம்வாய்ந்ததுமான அணியாகத் தென்படுகின்றது. ஆனால், மாளிகாவத்தை யூத் மற்றொரு அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
சிட்டி லீக் தலைவர் கிண்ண கால்பந்தாட்ட சுற்றுப் போட்டிக்கு சிட்டி லீக் தலைவர் ஆர். புவனேந்திரன் பூரண அனுசரணை வழங்குகிறார்.
இந்த சுற்றுப் போட்டியில் சம்பியனாகும் அணிக்கு சிட்டி லீக் தலைவர் கிண்ணத்துடன் ஒன்றரை இலட்சம் ரூபா பணப்பரிசு வழங்கப்படும். இரண்டாம் இடத்தைப் பெறும் அணிக்கு ஒரு இலட்சம் ரூபா பணப்பரிசு கிடைக்கவுள்ளது.
இது இவ்வாறிருக்க, சுற்றுப் போட்டியில் அதிசிறந்த கோல்காப்பாளர், அதிசிறந்த பின்கள வீரர், அதிசிறந்த மத்திய கள வீரர், அதிசிறந்த முன்கள வீரர் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டு விசேட விருதுகள் வழங்கப்படும்.