யாழ்ப்பாணத்தில் தாலிக்கொடி அறுத்த குற்றச்சாட்டில் ஒரு இந்திய பெண் மற்றும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த மூவர் என நான்கு பெண்கள் யாழ்.நீதவான் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் நீர்வேலி பிள்ளையார் கோவில் தேர்த்திருவிழா கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. அதன் போது பெண்ணொருவரின் தாலி கொடி ஒன்று அறுக்கப்பட்டுள்ளது.
அதனை அடுத்து ஆலயத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய நான்கு பெண்களை ஆலய இளைஞர்கள் மடக்கி பிடித்து கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
பொலிஸ் விசாரணையில் ஒருவர் இந்திய பிரஜை எனவும் மற்றைய மூவர் சிலாபம், மாத்தளை மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.
அவர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , மூவரையும் நேற்று செவ்வாய்க்கிழமை யாழ்.நீதவான் முன்னிலையில் முற்படுத்திய போது , அவர்களை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.