வரக்காபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட துல்ஹிரிய பகுதியில் இன்று புதன்கிழமை (02) காலை பஸ் ஒன்று பாரவூர்தியுடன் மோதி விபத்துக்குள்ளாகியதில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன் 22 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், இந்த வருடத்தின் முதல் 7 மாத காலப்பகுதியில் வாகன விபத்துக்களால் 1,296 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
வரக்காபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட துல்ஹிரிய பிரதேசத்தில் கொழும்பிலிருந்து அநூரதபுரம் நோக்கி பயணித்து கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று எதிர் திசையில் சீமெந்து ஏற்றி வந்த பாரவூர்தியுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது பஸ் வீதியில் குடைசாய்ந்துள்ளதுடன் விபத்தின் போது பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும், 22 பேர் காயமடைந்த நிலையில் வரக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பில் பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், வரக்காப்பொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதற்கமைவாக இந்த வருடத்தின் ஜனவரி முதல் ஜூலை மாதம் 28 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 1,225 வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதுடன், இதன்போது 1,296 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த வருடங்களுடன் ஒப்பிடும் போது இந்த வருடத்தில் வாகன விபத்துக்கள் சடுதியாக அதிகரித்துள்ளது.
குறிப்பாக 2020 ஆம் ஆண்டு நாட்டில் 23,704 வாகன விபத்துகள் இடம்பெற்றுள்ளதுடன் அவற்றுள் 2,370 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 2021 ஆம் ஆண்டு 22,847 விபத்துக்கள் பதிவாகியுள்ளதுடன் அதில் 2,559 பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை, கடந்த வருடம் 21,992 விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதுடன் அதில் 2,536 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
வீதி விதிமுறைகளை பின்பற்றாமை, அதிக வேகம், மதுபானம் அருந்திவிட்டு வாகனம் செலுத்துதல், போதைப்பொருள் பாவனை மற்றும் நித்திரையின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த விபத்துகள் சம்பவித்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.