ஈழத்துக் கவிஞர், எழுத்தாளர் தீபச்செல்வன் அவர்களின் ‘பயங்கரவாதி’ நூல் அறிமுக விழா தமிழ் தாய் மன்றத்தின் ஏற்பாட்டில் இன்று ஞாயிறு (ஜூலை 30, 2023) பிற்பகல் ரொறன்ரோ – ஸ்கார்பரோவில் சிறப்பான முறையில் நடைபெற்றது.
திரு ஞானம் அன்ரனி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அறிமுகவுரையை திரு பொன்னையா விவேகானந்தன் வழங்க, தொடர்ந்து நூலின் ஆய்வுரைகளை திருமதி மேளின் இமானுவல், பேராசிரியர் அ. இராமசாமி ஆகியோர் நிகழ்த்தினர்.
சிறந்த நாவலுக்கான இயல்புகளை கொண்டுள்ள பயங்கரவாதி, ஆங்கிலம், சிங்களம் எனப் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட வேண்டிய நாவல் என்று தெரிவித்த பேராசிரியர் அ. இராமசாமி மிக முக்கியமான நாவலாகவும் பயங்கரவாதியைக் குறிப்பிட்டார்.
இதேவேளை ஆய்வுரை நிகழ்த்திய திருமதி மேளின் இமானுவல், தீபச்செல்வன் பயங்கரவாதியில் பதிவு செய்துள்ள பல நிகழ்வுகளையும் கதைகளையும் தாயக மண்ணில் நேரடியாக தாம் பார்த்திருப்பதாகவும் கூறினார்.
திரைப்பட இயக்குநர் திரு ரஞ்சித் ஜோசப், நூலாசிரியர் தீபச்செல்வனைப் பற்றிப் பலரும் அறியாத தகவல்களைக் குறிப்பிட்டார். பெரும் போராட்டங்கள், நெருக்கடிகளின் மத்தியில் தனிப்பட்ட வாழ்வின் சோகங்களை கடந்து தீபச்செல்வன் எழுத்துப் போராளியாக களத்தில் நின்று செயற்படுவதையும் ரஞ்சித் ஜோசப் தெரிவித்தார்.
நிறைவாக நூலாசிரியர் தீபச்செல்வன் தாயகத்திலிருந்து ஏற்புரையை நிகழ்த்தினார். திரு பொன்னையா விவேகானந்தனின் நன்றியுரையுடன் நிகழ்வு இனிதே நிறைவடைந்தது.