எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் வைத்தியர்களுக்கான கணிசமான சம்பள அதிகரிப்பை வழங்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இணக்கம் வெளியிட்டுள்ளார்.
கொழும்பில் இன்றையதினம்(30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர் ஹரித அலுத்கே இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
சம்பளப் பிரச்சினை காரணமாக பல வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறத் தூண்டப்பட்டுள்ளனர்.
நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முக்கிய காரணம்
வெளிநோயாளர் பிரிவில் ஒரு நோயாளியைப் பார்ப்பதற்காக மருத்துவருக்கு 28 ரூபாய் வழங்கப்படுகிறது. ஒரு நோயாளியை கிளினிக்கில் பார்க்க சுமார் 36 ரூபாயே வழங்கப்படுகிறது.
பயிற்சி மருத்துவர்கள் இன்னும் நியாயமற்ற முறையில் நடத்தப்படுகிறார்கள். இதனால் பெரும் ஏமாற்றத்திற்கு ஆளான வைத்தியர்களை இவையெல்லாம் பாதித்துள்ளதுடன், தமக்கு இழைக்கப்பட்ட அநீதியால் அவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்து விட்டது.
அதனை சரிசெய்வதற்காக அனைத்தையும் மீளாய்வு செய்து நிதியமைச்சுடன் பேசி, எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக இது தொடர்பான முதல் ஆரம்ப நடவடிக்கைகளை மேற்கொள்ள ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.
அது ஏதோ ஒரு விசேடமாக மாறும் என்பதில் உறுதியாக உள்ளோம். இந்த முன்மொழிவுகளின் அடிப்படையில் மருத்துவர்களுக்கான சம்பள முறையை உருவாக்குவது அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.