சுகாதார அமைச்சின் கீழ் உள்ள வைத்தியசாலைகளுக்கு எதிர்வரும் இரண்டு மாதங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபை உறுதியளித்துள்ளதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் விசேட வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்தார்.
கண்டியில் வியாழக்கிழமை (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனை அவர் தெரிவித்தார்.
சுகாதார அமைச்சருக்கும், இலங்கை மின்சார சபை தலைவருக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இணக்கப்பாடு எட்டப்பட்டதையடுத்து, இந்த உறுதிமொழியை உறுதிப்படுத்தும் கடிதத்தை இலங்கை மின்சார சபை வழங்கியுள்ளதாக சமன் ரத்நாயக்க குறிப்பிட்டார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நிலுவையிலுள்ள மின்சாரக் கட்டணங்களை செலுத்துவதற்கு திறைசேரியால் 120 மில்லியன் ரூபாய் சுகாதார அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த நான்கைந்து மாதங்களாக அரச வைத்தியசாலைகளின் மின் கட்டணத்தை சுகாதார அமைச்சினால் செலுத்த முடியவில்லை.
எவ்வாறாயினும், அடுத்த இரண்டு மாதங்களுக்குள் நிலுவையிலுள்ள கட்டணங்களை செலுத்துவதாக உறுதியளித்ததையடுத்து, அரச வைத்தியசாலைகளுக்கான மின் இணைப்பைத் துண்டிக்காமல் இருப்பதற்கு இலங்கை மின்சார சபை ஒப்புக்கொண்டது.
எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் நிலுவையிலுள்ள மின்சார சபையின் கட்டணங்களைத் செலுத்துவதற்கு, ஒவ்வொரு மாதமும் மின்சாரக் கட்டணம் செலுத்தப்படுவதை உறுதி செய்வதற்கு நிதியை வழங்குவதற்கும் திறைசேரி கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளதாக சமன் ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.