பிரான்சின் பாரிசில் இடம்பெற்ற சிறந்த பாண் உற்பத்தியாளருக்கான போட்டியில் இந்த ஆண்டுக்கான விருதை வென்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தர்ஷன் செல்வராஜா இன்று வெள்ளிக்கிழமை (28) இலங்கையை வந்தடைந்தார்.
யாழ்ப்பாணம் தெல்லிப்பளைப் பகுதியைச் சேர்ந்த தர்ஷன் செல்வராஜா அவரது 2 பிள்ளைகள் மற்றும் அவரது மனைவியுடன் இலங்கைக்கான மூன்று வார பயணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
பிரான்ஸில் – பாரிசில் ஆண்டுதோறும் நடத்தப்படும் ‘சிறந்த பாண் உற்பத்தியாளருக்கான போட்டியில், இந்த ஆண்டுக்கான விருதை இலங்கையின் யாழ்ப்பாணம் தெல்லிப்பளையைச் சேர்ந்த 37 வயதான தர்ஷன் செல்வராஜா வென்றிருந்தார்.
“La meilleure baguette de Paris”என்பது இந்த போட்டியின் பெயராகும். இது தமிழில் ‘பாரிசின் சிறந்த பாண்’ என்று அர்த்தப்படும்.
30 ஆவது முறையாக இடம்பெறும் இந்தப் போட்டியில், இந்தமுறை 126 பேர், பிரான்சின் பாரம்பரியம்மிக்க baguette போட்டிக்கு பாணைத் தயாரித்து அனுப்பியிருந்தனர்.
இதில், தர்ஷன் செல்வராஜா தயாரித்த பாணின் தரம் மற்றும் சுவை நடுவர்களைக் கவர்ந்து, முதலிடத்தைப் பிடித்திருந்ததுடன் வெற்றிப் பரிசாக 4,000 யூரோவை பணப்பரிசாகவும் பெற்றிருந்தார்.
அத்துடன், பிரான்ஸின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன்னின் எலிசே மாளிகையில், அடுத்துவரும் ஓர் ஆண்டுக்கு பாண் தயாரிக்கும் வாய்ப்பும் தர்ஷனுக்கு கிட்டியது.
இந்நிலையில் கட்டுநாயக்க விமான நிலையம் வந்திறங்கிய பின் ஊடகவியலாளரிடம் கருத்து வெளியிட்ட தர்ஷன் செல்வராஜா,
நான் 2016 ஆம் ஆண்டு பிரான்ஸ் சென்றிருந்தேன். நான் போகும்போது எனக்கு பிரெஞ்சு மொழி தெரியாது. அதுமட்டுமல்ல, பேக்கரியில் வேலை செய்யக்கூடத் தெரியாது. ஆனால் நான் பிரான்சின் பாரிஸில் உள்ள ” au Levain Des Pyrenees ” பேக்கரியில் வேலைக்குச் சென்றேன்.
உரிமையாளர் மிகவும் நட்பானவர். அவர் எனக்கு பிரஞ்சு மொழியையும் பேக்கரி தொழிலையும் கற்றுக் கொடுத்தார். இப்போது அவருக்கு 70 வயதாகிறது. நான் வேலை செய்த பேக்கரியை 03 வருடங்களுக்கு முன் சொந்தமாக வாங்கினேன்.
பிரான்ஸின் பாரிஸில் 1,300 பேக்கரி உற்பத்தியாளர்கள் அரசால் பதிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுடன் போட்டியிட்டு 2023 இல் சிறந்த பிரெஞ்சு “பாகுட்” பாண் தயாரிப்பாளராக வெற்றி பெற முடிந்தது. அதனால்தான் பிரான்ஸ் ஜனாதிபதியின் இல்லத்திற்கு ஓராண்டுக்கு “பாகுட்” பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களை தயாரித்து வழங்கும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதெனக் கூறினார்.