கோலாலம்பூரில் நடைபெற்ற இருபது 20 உலகக் கிண்ண ஆசிய ‘பி’ தொகுதிக்கான தகுதிகாண் போட்டி ஒன்றில் மலேசிய வீரர் சியாஸ்ருள் ஐத்ருஸ் 7 விக்கெட் குவியலை பதிவு செய்து உலக சாதனை படைத்தார்.
இதன் மூலம் சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் 7 விக்கெட்களை வீழ்த்திய முதலாவது வீரர் என்ற பெருமையை ஐத்ருஸ் தனதாக்கிக்கொண்டார்.
சீனாவுக்கு எதிராக நடைபெற்ற இருபது 20 உலகக் கிண்ண ஆசிய ‘பி’ தொகுதிக்கான தகுதிகாண் போட்டியில் ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 4 ஓவர்கள் பந்து வீசி 8 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்களை வீழ்த்தி இந்த சாதனையை சியாஸ்ருள் ஐத்ருஸ் நிலைநாட்டினார்.
சகல வகையான இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் பதிவான அதிசிறந்த பந்துவீச்சு பெறுதி இதுவாகும்.
2019இல் நடைபெற்ற வைட்டலிட்டி ப்ளாஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பேர்மிங்ஹாம் பியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லெஸ்டர்ஷயர் வீரர் கொலின் அக்கர்மன் 18 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்களைக் கைப்பற்றியிருந்ததே சகல வகையான இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் பதிவான முந்தைய சிறந்த பந்துவீச்சு பெறுதியாகும்.
சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் இதற்கு முன்னர் நைஜீரிய வீரர் பீட்டர் அஹோ அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியை கொண்டிருந்தார்.
2021இல் நடைபெற்ற சியேரா லியோன் அணிக்கு எதிரான போட்டியில் அஹோ 5 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.
அதற்கு முன்னர் 2019இல் பங்களாதேஷுக்கு எதிரான சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் தீப்பக் சஹாரும் லெசோத்தோவுக்கு எதிரான போட்டியில் உகண்டா வீரர் தினேஷ் நக்ரானியும் 7 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்கள் என்ற மூன்றாவது அதிசிறந்த இணை பந்துவீச்சுப் பெறுதியை பகிர்ந்துகொண்டிருந்தனர்.
கோலாலம்பூரில் புதன்கிழமை (26) நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த சீனா 4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 12 ஓட்டங்களை பெற்றிருந்தது.
மூன்றாவது பந்துவீச்சாளராக 3ஆவது ஓவரில் அறிமுகமான ஐத்ருஸ், தனது 2ஆவது ஓவரின் முதல் பந்தில் விக்கெட் ஒன்றை கைப்பற்றியதுடன் அந்த ஓவரில் மேலும் 3 விக்கெட்களை சாய்த்தார்.
தனது 3ஆவது ஓவரில் மேலும் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றி 5 விக்கெட் குவியலைப் பதிவுசெய்த ஐத்ருஸ், கடைசி ஓவரில் ஓட்டம் எதுவும் கொடுக்காமல் மேலும் 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். அவர் 7 விக்கெட்களையும் போல்ட் முறையில் வீழ்த்தியது சிறப்பம்சமாகும்.
அப்போது சீனா 9 விக்கெட்களை இழந்து 20 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
கடைசி விக்கெட்டை விஜய் உன்னி கைப்பற்ற 11.2 ஓவர்களில் சீனா 23 ஓட்டங்களுக்கு சுருண்டது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மலேசியா 4.5 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 24 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
இருபது 20 உலகக் கிண்ண ஆசிய ‘பி’ தொகுதி தகுதிகாண் சுற்றுப் போட்டியில் பூட்டான், மியன்மார், தாய்லாந்து ஆகிய நாடுகளும் விளையாடுகின்றன.