மிகவும் எதிர்பார்க்கப்பட்ட லங்கா பிரீமியர் லீக் 4ஆவது அத்தியாயம் ஆரம்பமவாதற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் அதற்கு உற்சாகம் ஊட்டும் வகையில் போட்டி ஏற்பாட்டாளர்கள் ‘மினி கூப்பர் பவணி’ ஒன்றை கொழும்பில் விமரிசையாக நடத்தியிருந்தனர்.
40க்கும் மேற்பட்ட கிளாசிக் மினி கூப்பர் கார்களும் ரெக்சின் போர்க்கப்பட்ட மோக் வகை கார்களும் கொழும்பு வீதிகள் ஊடாக பவணியாக சென்றதை பார்வையாளர்களும் கிரிக்கெட் ஆர்வலர்களும் கண்டு ரசித்தனர்.
இந்த கார் பவணிக்கு மிகவும் பொருத்தமான வகையில் ‘குரூசிங் கொழும்பு லங்கா பிரீமியர் லீக் சீசன் 4 மினி கூப்பர் ரெலி’ என பெயர் சூட்டப்பட்டிருந்தது.
லங்கா பிறீமியர் லீக் 2023 போட்டிப் பணிப்பாளர் சமந்த தொடன்வெலவின் ஆலோசனைக்கு அ மைய இந்தப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் தலைமையகத்தில் இருந்து தனது பயணத்தைத் தொடங்கிய கிளாசிக் கார்களின் பவணி சுதந்திர சதுக்கம், பம்பலப்பிட்டி முச்சந்தி, காலி வீதி, இலங்கை வங்கி மாவத்தை கொழும்பு கோட்டை ஆகிய வீதிகளை கடந்து, டெக்னிக்கல் சந்தி ஊடாக ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நிறைவடைந்தது.
லங்கா பிறீமியர் லீக் போட்டிக்கு பிரசாரம் செய்யும் வகையில் நடத்தப்பட்ட இந்த அற்புதமான பேரணியை சாத்தியமாக்குவதற்கு மோட்டார் பந்தய சம்பியன் சிரேஷ்ட காரோட்டி டிலந்த மாலகமுவ மற்றும் மைட்டி மினி க்ளப் ஒவ் ஸ்ரீலங்கா தலைவர் நாமல் சில்வா ஆகியோர் தங்களது பங்களிப்பை வழங்கியிருந்தனர்.
மினி கூப்பர் ரெலியில் பங்குபற்றிய சாரதிகளுக்கு லங்கா பிறீமியர் லீக் 2023 போட்டிகளைக் கண்டுகளிக்கவென இலவச டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன.
மினி கூப்பர் பேரணியானது விளையாட்டுத்திறன், தோழமை மற்றும் சாகச உணர்வுகளை வெளிக்கொண்டுவரும் ஒரு மறக்க முடியாத எல்பிஎல் 2023க்கான களத்தை அமைத்துள்ளது.
லங்கா பிறீமியர் லீக் கிரிகெட்டின் பிரமாண்டமான ஆரம்ப விழாவிற்கு இன்னும் ஒரு வாரமே எஞ்சியுள்ள நிலையில், அப் போட்டி ஏற்படுத்தவுள்ள பரபரப்பையும் விறுவிறுப்பையும் உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.