கொழும்பில் நடைபெற்றுவரும் வளர்ந்துவரும் அணிகள் ஆசிய கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் ஏ அணியை எதிர்த்தாடுவதற்கு இந்தியா ஏ அணி தகுதிபெற்றுள்ளது.
பங்களாதேஷ் ஏ அணிக்கு எதிராக ஆர். பிரேமதாச சர்வதேச விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (21) நடைபெற்ற இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் 51 ஓட்டங்களால் வெற்றிபெற்றதன் மூலம் 211 ஓட்டங்களைத் தக்கவைத்து இறுதிப் போட்டியில் விளையாடுவதை இந்தியா ஏ அணி உறுதிசெய்துகொண்டது.
இறுதிப் போட்டி இதே விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (21) பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இரண்டாவது அரை இறதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்தியா ஏ அணி 49.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 211 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில் நால்வரைத் தவிர வேறு எவரும் 20 ஓட்டங்களைப் பெறாததுடன் உறுதியான இணைப்பாட்டங்கள் இடம்பெறாதது இந்திய ஏ அணிக்கு நெருக்கடியைக் கொடுத்தது.
அணித் தலைவர் யாஷ் துல் மாத்திரமே கடைசி வரை பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி இந்தியா ஏ அணியை ஓரளவு கௌரவமான நிலையில் இட்டார்.
19ஆவது ஓவரில் களம் புகுந்த யாஷ் துல் கடைசி ஓவரின் முதலாவது பந்தில் கடைசியாக ஆட்டம் இழந்தார். 85 பந்துகளை எதிர்கொண்ட யாஷ் துல் 66 ஓட்டங்களைப் பெற்றார்.
அவரைவிட அபிஷேன் ஷர்மா 334 ஓட்டங்களையும் சாய் சுதர்ஷன், மனவ் சுதார் ஆகிய இருவரும் தலா 21 ஓட்டங்களையும் பெற்றனர்.
பங்களாதேஷ் ஏ அணி பந்துவீச்சில் ரக்கிபுல் ஹசன் 36 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மெஹெதி ஹசன் 39 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் தன்ஸிம் ஹசன் சக்கிப் 58 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
212 ஓட்டங்கள் என்ற சுமாரான மொத்த எண்ணிக்கையை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் ஏ அணி 34.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 160 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
போட்டியின் 19ஆவது ஓவரில் பங்களாதேஷ் ஏ அணி 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 100 ஓட்டங்களைப் பெற்றிருந்ததால் அவ்வணி இலகுவாக வெற்றிபெற்றுவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், சிறந்த வியூகங்களை அமைத்து விளையாடிய இந்தியா ஏ அணி 60 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கடைசி 8 விக்கெட்களை வீழ்த்தி அபார வெற்றியீட்டியது.
பங்களாதேஷ் ஏ அணி துடுப்பாட்டத்தில் தன்ஸித் ஹசன் 51 ஓட்டங்களையும் மொஹமத் நய்ம் 38 ஓட்டங்களையும் அணித் தலைவர் சய்ப் ஹசன் 22 ஓட்டங்களையம் மஹ்முதுல் ஹசன் ஜோய் 20 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் நிஷாந்த் சிந்து 20 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் மனாவ் சுதார் 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.