எட்டு நாடுகள் பங்குபற்றும் வளர்ந்துவரும் அணிகள் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை (14) நடைபெற்ற பி குழுவுக்கான 2 போட்டிகளில் இந்திய ஏ அணியும் பாகிஸ்தான் ஏ அணியும் வெற்றிபெற்றன.
எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஐக்கிய அரபு இராச்சிய ஏ அணியை எதிர்கொண்ட இந்திய ஏ அணி 8 விக்கெட்களால் மிக இலகுவாக வெற்றிபெற்றது.
ஹர்ஷித் ரானா பதிவு செய்த 4 விக்கெட் குவியல், அணித் தலைவர் யாஷ் துல் குவித்த ஆட்டம் இழக்காத சதம் என்பன இந்திய ஏ அணிக்கு இலகுவான வெற்றியை ஈட்டிக்கொடுத்தன.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு இராச்சிய ஏ அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 175 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில் அஷ்வன்த் வால்தாபா (46), ஆரியன்ஷ் ஷர்மா (38), மொஹம்மத் பராஸுடின் (35) ஆகிய மூவரே ஓரளவு திறமையை வெளிப்படுத்தினர்.
பந்துவீச்சில் ஹர்ஷித் ரானா 41 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் மானவ் சுதார் 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் நிட்டிஷ் குமார் ரெட்டி 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய ஏ அணி 26.3 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 179 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
யாஷ் துல் 20 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 108 ஓட்டங்களுடனும் நிக்கின் ஜோஸ் 41 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். அவர்கள் இருவரும் பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் 158 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
பாகிஸ்தான் ஏ அணி வெற்றி
நேபாளத்திற்கு எதிராக சி.சி.சி. மைதானத்தில் நடைபெற்ற பி குழுவுக்கான மற்றொரு போட்டியில் பாகிஸ்தான் ஏ அணி 4 விக்கெட்களால் வெற்றிபெற்றது.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நேபாளம் 37 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 179 ஓட்டங்களைப் பெற்றது.
16ஆவது ஓவரில் நேபாளம் 8ஆவது விக்கெட்டை இழந்தபோது 72 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தது.
ஆனால், கடைசி இரண்டு விக்கெட்களில் 107 ஓட்டங்கள் பெறப்பட்டதால் நேபாளம் கௌரவமான நிலையை அடைந்தது.
9ஆம் இலக்க வீரர் சோம்பால் காமி நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 75 ஓட்டங்களைப் பெற்றதுடன் 9ஆவது விக்கெட்டில் ப்ராட்டிஸுடன் 58 ஓட்டங்களையும் கடைசி விக்கெட்டில் லலித் ராஜபான்ஷியுடன் 49 ஓட்டங்களையும் பகிர்ந்தார்.
ப்ராட்டிஸ் 26 ஓட்டங்களைப் பெற்றதுடன் லலித் ராஜ்பான்ஷி ஒரு ஓட்டத்துடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
பந்துவீச்சில் ஷாநவாஸ் தஹானி 38 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் மொஹம்மத் வசிம் 51 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
வளர்ந்துவரும் அணிகள் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஷாநவாஸ் தஹானி முதலாவது வீரராக 5 விக்கெட் குவியலைப் பதிவுசெய்தார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 32.5 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 181 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
தய்யப் தாஹிர் 51 ஓட்ங்களையும் ஓமைர் யூசுப் 36 ஓட்டங்களையும் கம்ரன் குலாம் 31 ஓட்டங்களையும் சய்ம் அயூப் 24 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் லலித் ராஜ்பான்ஷி 50 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் பவன் சராவ் 15 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.