ஸிம்பாப்வேயில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் தொடர்ச்சியான வெற்றிகளை இலங்கை ஈட்டுவதற்கு கூட்டுமுயற்சியே காரணம் என இலங்கையின் உலகக் கிண்ண வாய்ப்பை உறுதி செய்தவர்களில் ஒருவரும் கடந்த இரண்டு போட்டிகளில் ஆட்டநாயகனானவருமான மஹீஷ் தீக்ஷன தெரிவித்துள்ளார்.
ஸிம்பாப்வேக்கு எதிராக புலாவாயோவில் நடைபெற்ற சுப்பர் 6 கிரிக்கெட் போட்டியில் வெற்றியீட்டி உலகக் கிண்ண வாய்ப்பை இலங்கை உறுதிசெய்துகொண்ட பின்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தபோது தீக்ஷன இதனைக் கூறினார்.
பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த மஹீஷ் தீக்ஷன, ‘எங்களுக்கு எவ்வித அழுத்தமும் இருக்கவில்லை. இரசிகர்களின் ஆதரவு பெரிய அளவில் கிடைத்தது. எமது சொந்த நாட்டில் இருப்பது போன்ற உணர்வுடனேயே விளையாடினோம். எமது அணி சமபலம் கொண்டது. எமது சுழல் சிறந்த பந்துவீச்சாளர்களும் வேகப்பந்து வீச்சாளர்களும் இருப்பதால் இந்த சுற்றுப் போட்டிக்கு நாங்கள் திறமையானவர்கள் என்பதை அறிந்திருந்தோம்.
ஓர் அணி என்ற வகையில் அடிப்படை நுணுக்கங்களை பின்பற்றி எமது திட்டங்களை செயற்படுத்தினோம். அதன் பலனாக இதுவரை விளையாடிய எல்லா போட்டிகளிலும் வெற்றிபெற்றோம்’ என்றார்.
இலங்கைக்கு எதிரான எந்தவொரு போட்டியிலும் மற்றைய அணிகள் 200 ஓட்டங்களை நெருங்காததற்கான காரணம் என்னவென தீக்ஷனவிடம் கேட்கப்பட்டபோது,
‘மாறுபட்ட பந்துவீச்சு முறைகள் இருப்பது எமது அணியில் இருக்கும் பிரதான அம்சமாகும். வனிந்து, மதீஷ, டில்ஷான் ஆகியோரும் நானும் (ஸிம்பாப்வெயுடனான போட்டியில்) மாறுப்பட்ட வியூகங்களை பந்துவீச்சில் பிரயோகித்தோம். எமது மாறுபட்ட பந்துவீச்சுகள் எமக்கு அனுகூலமாக அமைந்தது.
அதனால்தான் நாங்கள் பந்துவீச்சில் திறமையாக செயற்படுகிறோம். சுற்றுப் போட்டியின் ஆரம்பத்தில் வனிந்து ஹசரங்க விக்கெட்களைக் கைப்பற்றினார். கடந்த இரண்டு போட்டிகளில் வேகப்பந்துவீச்சாளர்களும் நானும் விக்கெட்களைக் கைப்பற்றினோம்.
‘ஸிம்பாப்வேயுடனான தீர்மானம் மிக்க போட்டியின் ஆரம்பத்தில் மதுஷன்க 3 விக்கெட்களை சரித்தார். அதன் பின்னர் அவ்வணியினர் இணைப்பாட்டம் ஒன்றின் மூலம் மொத்த எண்ணிக்கைக்கு உரமூட்ட முயற்சித்தனர். அதிர்ஷ்டவசமாக சிக்கந்தர் ராஸாவின் விக்கெட்டை தசுன் ஷானக்க கைப்பற்றி இணைப்பாட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்த பின்னர் மத்திய வரிசையில் நான் விக்கெட்களை வீழ்த்தினேன்’ என்றார்.

சில காலம் அணியில் இடம்பெறாதது குறித்து வினவப்பட்டபோது.
‘நான் திறமையை வெளிப்படுத்தாதால் இங்கிலாந்து, இந்தியா ஆகிய அணிகளுக்கு எதிரான தொடர்களில் என்னை செர்க்கவில்லை. ஆனால், அணியில் மீண்டும் இடம்கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்டமாக இருந்தாலும் சரி பந்துவீச்சாக இருந்தாலும் சரி கூட்டு முயற்சி அவசியம். வனிந்துவும் நானும் 20 விக்கெட்களுக்கு மேல் கைப்பற்றியுள்ளோம். அது எமது அணிக்கு நல்லது’ என்றார்.
மெற்கிந்தியத் தீவுகளின் தற்போதைய நிலைமை குறித்து தீக்ஷனவிடம் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த தீக்ஷன, ‘என்ன சொல்வதென்று எனக்கு தெரியவில்லை. மேற்கிந்தியத் தீவுகள் மிக மோசமான நிலையில் இருக்கிறது. மெற்கிந்தியத் தீவுகள் எம்மோடு விளையாட இருக்கிறது. எனவே அந்த அணி பற்றி எதையும் சொல்ல விரும்பவில்லை. நாங்கள் இங்கு வந்தது போட்டிகளில் வெற்றிபெறுவதற்காகவே’ என்றார்.
மேற்கிந்தியத் தீவுகள் அணியை ஹராரேயில் எதிர்வரும் 7ஆம் திகதி தனது கடைசி சுப்பர் 6 போட்டியில் சந்திக்கவுள்ள இலங்கை, 2 தினங்கள் கழித்து இறுதிப் போட்டியில் பெரும்பாலும் ஸிம்பாப்வேயை எதிர்த்தாடவுள்ளது.