சிட்டி புட்போல் லீக்கினால் நடத்தப்பட்டுவரும் சிட்டி லீக் தலைவர் கிண்ண கால்பந்தாட்டத்தின் 3 ஆம் கட்டப் போட்டிகளில் கலம்போ எவ்.சி. , ஜாவா லேன் ஆகிய இரண்டு அணிகளும் மிக இலகுவான வெற்றிகளை ஈட்டின.
சிட்டி லீக் மைதானத்தில் சனிக்கிழமை (01) நடைபெற்ற கால்பந்தாட்டப் போட்டியில் மாளிகாவத்தை யூத் அணியை எதிர்த்தாடிய கலம்போ எவ்.சி. 3 – 1 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிபெற்றது.
மிகவும் இறுக்கமாக நடைபெற்ற ஆட்டத்தின் முதலாவது பகுதியில் 15ஆவது நிமிடத்தில் எம். சவ்ரான் சத்தார் கோல் போட்டு கலம்போ எவ்.சி.யை முன்னிலையில் இட்டார்.
எனினும் போட்டியின் 34ஆவது நிமிடத்தில் மாளிகாவத்தை யூத்துக்கு கிடைத்த பெனல்டியை எம். அஸாம் கோலாக்கி கோல் நிலையை சமப்படுத்தினார்.
இடைவேளையின்போது இரண்டு அணிகளும் 1 – 1 என சமநிலையில் இருந்தன.
இடைவேளைக்குப் பின்னர் ஆக்ரோஷமாக விளையாடிய கலம்போ எவ்.சி. சார்பாக 61ஆவது நிமிடத்தில் எம். ஆக்கிப் தனி முயற்சி எடுத்துக்கொண்டு அற்புதமான கோல் ஒன்றைப் போட்டு தனது அணியை முன்னிலையில் இட்டார்.
அதன் பின்னர் கோல் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க முயற்சித்த கலம்போ எவ்.சி. கடைசி நிமிடத்தில் நிரான் கனிஷ்க மூலம் 3ஆவது கோலைப் போட்டு இலகுவாக வெற்றிபெற்றது.
ஜாவா லேனுக்கு 4 – 2 வெற்றி
இதே மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (02) நடைபெற்ற மற்றொரு போட்டியில் மொரகஸ்முல்ல அணியை 4 – 2 என்ற கோல்கள் அடிப்படையில் ஜாவா லேன் இலகுவாக வெற்றிகொண்டது.
ஐ. மொஹமத் சப்ரான் மிகத் திறமையாக விளையாடி 2 கோல்களைப் போட்டு ஜாவா லேன் கழகம் வெற்றிபெற உதவினார்.
போட்டி ஆரம்பித்து 4ஆவது நிமிடத்தில் அலாதியான கோல் ஒன்றைப் போட்டு ஜாவா லேன் அணியை மொஹமத் சப்ரான் முன்னிலையில் இட்டார்.
இந் நிலையலிருந்து இரண்டு அணிகளும் ஒன்றொக்கொன்று விட்டுக்கொடுக்காமல் விளையாடின.
போட்டியின் 38 ஆவது நிமிடத்தில் மொரகஸ்முல்ல சார்பாக டிலான் மதுஷன்க பந்தை தலையால் முட்டி கோல் போட்டு கோல் நிலையை சமப்படுத்தினார்.
இடைவேளையின்போது இரண்டு அணிகளும் தலா ஒரு கோலுடன் சமநிலையில் இருந்தன.
இடைவேளைக்குப் பின்னர் ஆட்டம் தொடர்ந்ததும் சப்ரான் 2ஆவது கோலைப் போட்டு ஜாவா லேன் அணியை மீண்டும் முன்னிலையில் இட்டார்.
12 நிமிடங்கள் கழித்து எம். எவ். ரிப்கான் மிக சாமர்த்தியமாக செயற்பட்டு ஜாவா லேனின் 3ஆவது கோலைப் போட்டார்.
76ஆவது நிமிடத்தில் மதுரங்க சில்வா மேலும் ஒரு கோல் போட ஜாவா லேன் 4 – 1 என முன்னிலை அடைந்தது.
எனினும் 2 நிமிடங்கள் கழித்து மொரகஸ்முல்ல கழகத்திற்கு கிடைத்த ப்றீ கிக்கை மிக பலமாக உதைத்த என். தனஞ்சய அலாதியான கோல் ஒன்றைப் போட்டார்.
இப் போட்டியில் இரண்டு அணிகளும் முரட்டுத்தனமாக விளையாடியதால் இரண்டு அணிகளிலும் 5 வீரர்கள் மஞ்சள் அட்டைக்கு இலக்காகினர்.