ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சிக்கு வருமாக இருந்தால் ஒற்றையாட்சிக்குள்ளேயே, மாகாண சபை முறைமையே தீர்வாக இருக்கும் என்று அந்தக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நல்லூரில் நேற்றையதினம் (03.07.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
“தந்தை செல்வா – டட்லி, பண்டா ஒப்பந்தம் என்பவற்றை அப்போது இருந்த தலைமைகள் முறையாக நிறைவேற்றியிருந்தால் 30 ஆண்டுகால போர் இடம்பெற்றிருக்காது. மாகாண சபையில் இருக்கின்ற குறைகள் நீக்கப்பட வேண்டும்.
தேவையற்ற செலவு
அதனை வலுப்படுத்த வேண்டும். நாம் அதனைச் செய்வோம். நான் எனது காலத்தில் அனைத்து மாகாண சபைகளுக்கும் தேவையான பணம் அனுப்பினேன்.
அதனை முழுமையாகச் செலவு செய்யாது சிறிதளவே செலவு செய்தன. எனக்கு அந்தப் பணத்தை மீண்டும் அனுப்பினார்கள். கிடைக்கின்ற பணத்தை தேவையில்லாது செலவு செய்வார்கள்.
மாகாண சபை அமைச்சர்கள், கதிரை, மேசை, வீட்டு உபகரணங்கள் என்பவற்றை மக்களுக்கு வழங்குவார்கள். மீளவும் தாங்கள் தேர்தலைச் சந்திப்பதற்காகவே அவர்கள் அவ்வாறு செய்வார்கள். மாகாண சபைகள் பிரச்சினைகளைக் கலந்துரையாடி முடிவை எடுக்க வேண்டும்.
சமஷ்டி முறையிலான அதிகார பகிர்வு
இயன்ற வரை ஜனாதிபதியாக இருந்தபோது நான் அறிவுரைகளை வழங்கியுள்ளேன். மாவட்ட அபிவிருத்தி சபைகளை நிலையான ஒன்றாக மாற்றினால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படாது என தெரிவித்துள்ளார்.
இதேவேளை ‘இந்த நாட்டில் சமஷ்டித் தீர்வை முதலில் முன்வைத்தது பண்டாரநாயக்க. அவர் உங்கள் கட்சியின் நிறுவுநர். உங்களது கட்சி ஒற்றையாட்சியைத் தாண்டிய சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வழங்குவதற்கு தயாரா?’ என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இந்த கேள்விக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேரடியாகப் பதிலளிப்பதைத் தவிர்த்துக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.