சிட்டி புட்போல் லீக்கினால் சிட்டி லீக் மைதானத்தில் நடத்தப்படும் 5 அணிகளுக்கு இடையிலான சிட்டி லீக் தலைவர் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் மொரகஸ்முல்ல கழகம் முதலாவது வெற்றியை ஈட்டியது.
2ஆம் கட்டப் போட்டிகள் வரை நடைபெற்றுள்ள 4 போட்டிகளில் மொரகஸ்முல்லை மாத்திரமே வெற்றிபெற்றதுள்ளது.
மூன்று போட்டிகள் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்துள்ளன.
முதலாம் பிரிவில் சம்பியனானதன் மூலம் தலைவர் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிக்கு தரமுயர்த்தப்பட்ட மாளிகாவத்தை யூத் தனது முதல் போட்டியில் மொரகஸ்முல்ல கழகத்திடம் தோல்வி அடைந்தது.
சனிக்கிழமை (24) நடைபெற்ற அப் போட்டி ஆரம்பம் முதல் கடைசிவரை விறுவிறுப்பாக அமைந்தது.
மாளிகாவத்தை யூத் வீரர் எம். ஆர். எம். ஷப்ரான் குறைந்தது 7 கோல் போடும் வாய்ப்புகளைத் தவறவிட்டமை அவ்வணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.
அவர் கோல்களைத் தவறவிட்ட போதிலும் பயிற்றுநர் அவரை மாற்றாமல் இருந்தது வியப்பைத் தோற்றுவித்தது.
போட்டியின் முதல் பகுதியில் மிக இலகுவான 2 கோல்களைத் தவறவிட்ட ஷப்ரான், இடைவேளைக்குப் பின்னர் மேலும் 5 கோல் போடும் வாய்ப்புகளைக் கோட்டை விட்டார்.
மறுபுறத்தில் இடைவேளையின் பின்னர் மிகத் திறமையாக விளையாடிய மொரகஸ்முல்ல 2 கோல்களைப் போட்டு வெற்றிபெற்றது.
போட்டியின் 55ஆவது நிமிடத்தில் திசர டி சில்வா அலாதியான கோல் ஒன்றைப் போட்டு மொரகஸ்முல்ல அணியை முன்னிலையில் இட்டார்.
தொடர்ந்து கோல் நிலையை சமப்படுத்த மாளிகாவத்தை யூத் எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.
போட்டியின் 90ஆவது நிமிடத்தில் மொரகஸ்முல்ல அணியின் 2ஆவது கோலை ஈ. உத்பொல போட்டார்.
போட்டி முடிவடைய ஓரிரு நிமிடங்கள் இருந்தபோது மொரகஸ்முல்ல வீரர் ஒருவரை தாக்கிய மாளிகாவத்தை யூத் வீரர் எம். பிலால் மத்தியஸ்தரின் சிவப்பு அட்டைக்கு இலக்கானார்.
சோண்டர்ஸ் – கலம்போ எவ்.சி.
வெற்றிதோல்வி இல்லை
சொண்டர்ஸ் கழகத்திற்கும் கலம்போ எவ்.சி.க்கும் இடையில் ஞாயிற்றுக்கிழமை (25) நடைபெற்ற கால்பந்தாட்டப் போட்டி கோல் போடப்படாமல் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.
இந்தப் போட்டியில் இரண்டு அணிகளும் திறமையாக விளையாடிய போதிலும் கோல் போடுவதில் இரண்டு அணிகளும் கோட்டை விட்டன.
இரண்டு அணிகளினதும் கோல் காப்பாளர்களும் அவ்வப்போது திறமையாக செயற்பட்டு கோல்களைத் தடுத்த வண்ணம் இருந்தனர்.