கொழும்பு இந்து கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் இந்து கல்லூரிக்கும் இடையிலான 12 ஆவது ‘இந்துக்களின் பெருஞ்சமர்’ கிரிக்கெட் போட்டி கொழும்பு பி. சரவணமுத்து ஓவல் சர்வதேச விளையாட்டரங்கில் ஜூன் 30ஆம், ஜூலை 1ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
1982இல் ஆரம்பமான இந்துக்களின் பெருஞ்சமர் கிரிக்கெட் போட்டி நாட்டில் ஏற்பட்ட அமைதியின்மை, அண்மைக் காலத்தில் பரவிய கொவிட் – 19 தொற்றுநோய், பொருளாதார நெருக்கடி, அரசியல் நெருக்கடி ஆகிய காரணங்களால் அவ்வப்போது தடைப்பட்டது.
எதிர்காலத்தில் இப் போட்டியை தங்குதடையின்றி மிகச் சிறப்பாக உயரிய தரத்துடன் வருடாந்தம் நடத்தும் குறிக்கோளுடன் இரண்டு கல்லூரிகளுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.
கொழும்பு தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் அத்லெட்டிக் க்ளப் கேட்போர் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை (18) மாலை நடைபெற்ற வைபவத்தின்போது இந்த புரிந்துணவர்வு உடன்படிக்கையில் இரண்டு கல்லூரிகளினதும் பிரதிநிதிகள் கைச்சாத்திட்டனர்.
கொழும்பு இந்து கல்லூரி சார்பாக அதிபர் கே. நாகேந்திரா, பழைய மாணவர் சங்க விளையாட்டுத்துறை பிரிவு தலைவர் டொக்டர் ஜீ. ரஜீவ் நிர்மலசிங்கம், யாழ். இந்து கல்லூரி சார்பாக அதிபர் ரட்னம் செந்தில்மாறன், பழைய மாணவர் சங்க கொழும்பு கிளைத் தலைவர் என். பிரேம்குமார் ஆகியோர் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.
இந்துக்களின் பெருஞ்சமர் கிரிக்கெட் போட்டியை எதிர்காலத்தில் மிகவும் சிறப்பாக நடத்துவதைக் குறிக்கோளாகக் கொண்டு ஒவ்வொரு வருடமும் இந்துக்களின் பெருஞ்சமர் நடைபெறுவதற்கு 3 மாதங்களுக்கு முன்னர் விசேட இணைக்குழுவை நியமிக்க இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பாடசாலைகளுக்கு இடையிலான பெருஞ்சமர் கிரிக்கெட் போட்டிகள் அந்தந்த நகரங்களிலுள்ள பாடசாலைகளுக்கு இடையிலேயே நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், இந்துக்களின் பெருஞ்சமர் 400 கிலோ 400 கிலோ மீற்றர்கள் தூரத்தில் இரண்டு நகரங்களில் உள்ள கொழும்பு இந்து கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் இந்து கல்லூரிக்கும் இடையில் நடைபெறுவது விடேச அம்சமாகும்.
அங்குரார்ப்பண இந்துக்களின் பெருஞ்சமர்
அங்குரார்ப்பண இந்துக்களின் பெருஞ்சமர் கொழும்பில் 1982இல் நடைபெற்றதுடன் 2ஆவது அத்தியாயம் யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக 22 ஆண்டுகள் தடைப்பட்ட இப் போட்டி 2005 இல் 40 ஓவர் கிரிக்கெட் போட்டியாக கொழும்பில் நடத்தப்பட்டது. தொடர்ந்து 2013இல் யாழ்ப்பாணத்திலும் 2014 முதல் 2019வரை கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் மாறிமாறி நடத்தப்பட்டன.
2019இல் கொவிட் – 19 தாக்கம், பின்னர் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, அரசியல் நெருக்கடி ஆகியன காரணமாக மீண்டும் இந்துக்களின் பெருஞ்சமர் தடைப்பட்டது.
நிதி நெருக்கடிகளுக்கு மத்தியிலும் 3 வருட இடைவெளியின் பின்னர் மீண்டும் இப் போட்டி யாழ்ப்பாணத்தில் 2022இல் நடத்தப்பட்டது.
இதேவேளை, இரண்டு கல்லூரிகளினதும் கிரிக்கெட் அணிகளின் தலைவர்களால் இந்துக்களின் பெருஞ்சமர் வெற்றிக் கிண்ணம் அறிமுகம் செய்துவைக்கப்பட்டது.
சர்வதேச அரங்கில் 12ஆவது இந்துக்களின் பெருஞ்சமர்
இலங்கையில் வரலாற்று முக்கியம்வாய்ந்த முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விளையாடப்பட்ட பி. சரவணமுத்து ஓவல் விளையாட்டரங்கில் 12ஆவது இந்துக்களின் பெருஞ்சமர் கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது.
விவாதப் போட்டி
கொழும்பு இந்து மற்றும் யாழ்ப்பாணம் இந்து ஆகிய இரண்டு பாடசாலைகளும் கல்விக்கே முன்னுரிமை வழங்கிவருகின்றமை அனைவரும் அறிந்த விடயம்.
எனவே, இரண்டு கல்லூரிகளினதும் மாணவர்களின் அறிவாற்றல்களை விருத்தி செய்யும் நோக்கத்துடன் இரண்டு பாடசாலைகளுக்கும் இடையில் விவாதப் போட்டியை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த விவாதப்போட்டி சரஸ்வதி மண்டபத்தில் ஜூன் 30ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
ஜனசக்தி அனுசரணை
இந்த வருடப் போட்டிக்கு ஜனசக்தி பிரதான அனுசரணை வழங்குகிறது.
பிரதான அனுசரணைக்கான காசோலையை இரண்டு கல்லூரிகளினதும் அதிபர்களிடம் ஜனசக்தி ஸ்தாபகரும் நிறுவனத்தின் முதலாவது அதிபருமான சந்த்ரா ஷாப்டர் கையளித்தார்.
இந்துக்களின் பெருஞ்சமர் கிரிக்கெட் போட்டிக்கு அனுசரணை வழங்குவதில் பெருமை அடைவதாகக் குறிப்பிட்ட சந்த்ரா ஷாப்டர், டெஸ்ட் அந்தஸ்துடைய அரங்கில் இப் போட்டி நடத்தப்படுவதன் மூலம் வீரர்களுக்கு புதிய அனுபவம் கிடைக்கும் எனவும் கூறினார்.
(படப்பிடிப்பு: எஸ். சுரேந்திரன்)