இலங்கை இராணுவத்தின் உறுப்பினர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள சர்வதேச பயணத் தடை மற்றும் கனேடியப் பிரதமரின் இனப்படுகொலை தொடர்பான பொய்க் குற்றச்சாட்டுகளுக்கு எதிராகக் கடுமையான நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் சரத் வீரசேகர அறிவுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் கடந்த வாரம் கூடிய தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வைக்குழுவுக்கு தலைமைதாங்கியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இலங்கையின் இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள சர்வதேச பயணத் தடையானது இராணுவத்தினரின் மன உறுதியைப் பாதிப்பதால், அதற்கு எதிராக செயற்பட வேண்டியதன் அவசியத்தையும், இந்தப் பிரச்சினையைத் தீர்க்க வெளிவிவகார அமைச்சின் தலையீட்டின் முக்கியத்துவத்தையும் தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர வலியுறுத்தினார்.
இது தொடர்பான இலங்கையின் நிலைப்பாட்டை அந்த நாடுகளின் அரசாங்கங்களுக்கு தூதுவர்கள் ஊடாகவும் உயர்மட்ட இராஜதந்திர பேச்சுவார்த்தைகளின் ஊடாகவும் வலுவாகத் தெரிவிக்கப்பட்டிருப்பதாக இதற்குப் பதிலளித்த வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டினார். இவ்வாறான முடிவுகளை மறுபரிசீலனை செய்ய சம்பந்தப்பட்ட அரசுகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அத்துடன் இந்த நாட்டின் இராணுவ உறுப்பினர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள பயணத்தடையை எதிர்ப்பதற்கு தேவையான அனைத்து உண்மைகளையும் சேகரித்து உரிய தூதுவர்களிடம் வழங்குமாறு வெளிவிவகார அமைச்சின் செயலாளருக்குக் குழுவினால் பணிப்புரை விடுக்கப்பட்டது.
அத்துடன், தருஸ்மன் மற்றும் OICL ஆகிய இரண்டு அறிக்கைகளாலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளபடி, இலங்கை ஒரு சர்வதேச இராணுவ மோதலைக் கொண்டிராத நாடு என்பதால் இவ்வாறு பயணத்தடை விதிப்பது ஜெனீவா உடன்படிக்கைக்கு எதிரானது என்ற விடயத்தை வலியுறுத்துமாறும் குழுவின் தலைவர் தெரிவித்தார்.
இலங்கை தமிழ் மக்களுக்கு எதிராக இனப்படுகொலை இடம்பெற்றிருப்பதாக கனேடியப் பாராளுமன்றத்தில் பிரேரணையொன்று கொண்டுவரப்பட்டு அது ஏகமனதாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு எடுக்கக் கூடிய நடவடிக்கைகள் மற்றும் இவ்வாறான கருத்துக்களுக்கு இலங்கை பொறுப்பல்ல என்பதை மற்ற நாடுகளுக்கு அறிவித்தமை குறித்த விபரங்களை சமர்ப்பிக்குமாறும் குழு வெளிவிவகார அமைச்சின் செயலாளரிடம் இதன்போது கோரியது.
இலங்கை இராணுவத்தின் எண்ணிக்கையை சரியான அளவில் பேணுவது, சில கிராமப் பகுதிகளில் இருந்து இராணுவத் தளங்களைத் திரும்பப் பெறுவது மற்றும் அது தேசிய பாதுகாப்பில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்தும் குழு கேட்டறிந்தது.
இராணுவத்தினரை முறைப்படுத்துவது ஆட்குறைப்புச் செய்வது அல்ல என்றும், முகாம்களை அகற்றுவது தேசிய பாதுகாப்பு, பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் புனித இடங்களில் பாதுகாப்புக்கு பாதிப்பாக அமையாது எனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் குழுவில் தெரிவித்தார்.
மேலும், இலங்கையில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பில் குழு கவனம் செலுத்தியதுடன், தீவிரவாதத்தை தோற்கடிக்க செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியது.