நாடளாவிய ரீதியிலுள்ள 19 தேசிய கல்வியியற் கல்லூரிகளில் கடந்த 2018 – 2020 வரையான காலப்பகுதியில் பயிற்சியை நிறைவு செய்த 7342 ஆசிரியர் பயிலுனர்களுக்கு வெள்ளிக்கிழமை (16) நியமனங்கள் வழங்கப்பட்டன.
இதன் பிரதான நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பிலுள்ள அலரி மாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில், பிரதமர் தினேஷ்குணவர்தன, உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் , கல்வி இராஜாங்க அமைச்சர் அறவிந்தகுமார், கல்வி அமைச்சின் செயலாளர் எம்.என்.ரணசிங்க மற்றும் மேல் மாகாண ஆளுனர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த பிரதான நிகழ்வின் போது 2355 டிப்ளோமாதாரிகளுக்கு தேசிய பாடசாலைகளுக்கும் , மேல் மாகாண பாடசாலைகளுக்கும் ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டது.
ஏனையோருக்கு மாகாண கல்வி அமைச்சினால் அந்தந்த மாகாணங்களில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகளில் நியமனங்கள் வழங்கப்பட்டன.
ஆசிரியர் பற்றாக்குறையான இடங்களை ஆராய்ந்து அவ்விடங்களுக்கே நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. எனவே இம்முறை வழங்கப்பட்டுள்ள நியமனங்கள் தொடர்பான மேன்முறையீடுகள் எவையும் கவனத்தில் கொள்ளப்பட மாட்டாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.