தேசிய எல்லை நிர்ணய குழுவின் புதிய அறிக்கைக்கு அமைய, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான யோசனை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால், ஏற்கனவே தேர்தலுக்காக செலவிடப்பட்ட 1.1 பில்லியன் ரூபா வீண் செலவாகிவிடும். அத்தோடு, முன்னர் வேட்புமனு தாக்கல் செய்துள்ள வேட்பாளர்களின் கட்டுப்பணத்தை மீள செலுத்த வேண்டியேற்படும் என்று தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
தபால் மூல வாக்களிப்புக்கான வாக்குச்சீட்டுக்களை அச்சிடாமல் இருந்த காரணத்தினாலேயே அதனை நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டது. இதுவே முதன் முதலாக தேர்தலை காலம் தாழ்த்தப்படுவதற்கு அடிப்படையாக அமைந்தது. தேர்தல் இல்லை என்று எம்மால் கூற முடியாது. ஆனால், அதற்கான நிதியை வழங்கக்கூடிய சூழல் இல்லை என்றே அரசாங்கத்தினால் தெரிவிக்கப்பட்டது.
குறிப்பிட்ட தினத்தில் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட வேண்டுமெனில், அந்த அறிவிப்பை நிறுத்துவதற்கான அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு கிடையாது. அதன் அடிப்படையிலேயே எம்மால் தேர்தலுக்கான தினம் அறிவிக்கப்பட்டது. தம்மால் நிதியை வழங்க முடியும் என்று திறைசேரி நீதிமன்றத்துக்கு அறிவித்தால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எம்மால் தேர்தலை நடத்த முடியும்.
தேர்தலுக்கான முன்னேற்பாடுகளுக்காக இதுவரை எம்மால் 1.1 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. எனினும் அந்த செலவு பிரயோசனம் அற்றதாகியுள்ளது. ஏற்கனவே பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள வேட்புமனுக்கள், தற்போதுள்ள வாக்குச்சீட்டுக்களின் கீழ் தேர்தல் நடத்தப்பட்டால், இந்த செலவு வீணாகாது. எல்லை நிர்ணய குழுவின் புதிய அறிக்கைக்கு அமைய தேர்தல் நடத்தப்பட்டால் 1.1 பில்லியன் செலவு வீண் செலவாகும்.
எல்லை நிர்ணய குழுவுக்கும் எமக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை. எல்லை நிர்ணயம் செய்பவர்களாலேயே தேர்தலையும் நடத்த முடியாது. மதிப்பாய்வு செய்வதற்கு எமக்கு எல்லை நிர்ணய அறிக்கை இதுவரையில் கிடைக்கப் பெறவில்லை. புதிய எல்லை நிர்ணயத்தின் அடிப்படையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற கொள்கை ரீதியான தீர்மானம் அரசாங்கத்தினால் எடுக்கப்பட்டால் அதனை எம்மால் தடுக்க முடியாது.
கொள்கை ரீதியான தீர்மானங்களை எடுக்கும் அரசாங்கமே 1.1 பில்லியன் ரூபா செலவுக்கு பொறுப்புக்கூற வேண்டும். அத்தோடு, புதிய எல்லை நிர்ணயத்தின் அடிப்படையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள வேட்புமனுக்கள் இரத்து செய்யப்படும் என்பதோடு, கட்டுப்பணங்களையும் மீள செலுத்த வேண்டியேற்படும் என்றார்.