தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை கைது செய்ய காட்டிய அவசரத்தை ஏன் பாராளுமன்ற உறுப்பினர் டயனா கமகே விவகாரத்தில் காண்பிக்கவில்லை.
பிரித்தானிய பிரஜையான டயனா கமகேவை பாராளுமன்றம் பாதுகாத்தால் நாட்டு மக்கள் பாராளுமன்றத்தையும் நாட்டின் சட்டத்தையும் கடுமையாக விமர்சிப்பார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (8) இடம்பெற்ற நிதி,பொருளாதார உறுதிப்படுத்துகை மற்றும் தேசிய கொள்கைகள் ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கட்டளைகள் மீதான விவாதத்தின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
அறவிடப்படும் வரியை அரசாங்கம் முறையாக பயன்படுத்த வேண்டும். முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் மக்களின் வரி பணம் முறைகேடாக பயன்படுத்தப்பட்டது. மறுபுறம் அரச நிதி கொள்ளையடிக்கப்பட்டது. ஊழலை ஒழித்தால் மாத்திரமே நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைய முடியும்.
ஊழலற்ற,வெளிப்படை தன்மையிலான அரச நிர்வாகத்தை முன்னெடுக்குமாறு சர்வதேச நாணய நிதியம் அறிவுறுத்தியுள்ள நிலையில் ஊழலை ஒழிக்க அரசாங்கம் விசேட கவனம் செலுத்தும், ஊழலை ஒழிக்கும் என நம்பிக்கை கொள்ள முடியாது. ஊழல் ராஜபக்ஷர்களின் ஆதரவுடன் அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதால் ஊழல் இல்லாதொழியும் என்று குறிப்பிட முடியாது.
இந்த அரசாங்கம் மக்களாணைக்கு அச்சம் கொண்டுள்ளது. நிதி இல்லை அதனால் தேர்தலை நடத்த முடியாது என அரசாங்கம் குறிப்பிட்டது. ஆனால் தற்போது வெளிநாட்டு கையிருப்பு 3 பில்லியன் டொலராக நிலைப்படுத்தப்பட்டுள்ளது என அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. ஆகவே தேர்தல் வாக்கெடுப்புக்கு நிதி நெருக்கடி தற்போதும் வழக்கில் உள்ளதா ? என்பதை நீதிமன்றம் அரசாங்கத்திடம் வினவ வேண்டும்.
தேர்தல் தொடர்பில் ஊடக நிறுவனம் மேற்கொண்ட கருத்து கணிப்பில் நாட்டில் மொத்த சனதொகையில் 80 சதவீதமானோர் தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தியுள்ளார்கள். பாக்கிஸ்தான் நாட்டில் தேர்தல் தொடர்பான வழக்குக்குக்கு அந்த நாட்டு நீதிமன்றம் 24 மணித்தியாலத்துக்குள் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால் எமது நாட்டு நீதிமன்றத்தின் துரிதகர தன்மை கவலைக்குரியது.
நாட்டில் சட்டம் அனைவருக்கும் பொதுவாக செயற்படுத்தப்படுகிறதா என்பதில் பாரிய பிரச்சினை காணப்படுகிறது. பாராளுமன்ற உறுப்பினர் டயனா கமகேவின் இரட்டை குடியுரிமை விவகார வழக்கின் தீர்ப்பு தொடர்ந்து பிற்போடப்படுகிறது. முறைகேடான முறையில் கடவுச்சீட்டு பெற்றுக்கொண்டுள்ள விவகாரத்தில் டயனா கமகேவை கைது செய்ய முடியும் என கோட்டை நீதவான் நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில் அவர் இதுவரை ஏன் கைது செய்யப்படவில்லை.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை கைது செய்வதற்கு காட்டிய அக்கறை மற்றும் அவசரம் டயனா கமகே விவகாரத்தில் காண்பிக்கப்படவில்லை.பாராளுமன்ற உறுப்பினர் டயனா கமகே 2004 ஆம் ஆண்டு முதல் பிரித்தானிய நாட்டு கடவுச்சீட்டை பாவிக்கிறார் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் பாதுகாப்பு செயலாளருக்கு அறிவித்துள்ளார்.
பாராளுமன்றத்துக்கு பொருத்தமற்ற இவரை எவ்வாறு பாராளுமன்றம் பாதுகாக்க முடியும். பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரதுங்கவுக்கு சட்டத்தை செயற்படுத்த முடியுமாயின் ஏன் டயனா கமகே விவகாரத்தில் சட்டத்தை செயற்படுத்த முடியாது.
இலங்கை பிரஜை இல்லாத, பிரித்தானிய பிரஜையை பாராளுமன்றம் பாதுகாப்பதை மக்கள் கடுமையாக விமர்சிப்பார்கள். அரசாங்கத்தின் அதிகாரத்தின் பயன்படுத்திக் கொண்டு சட்டத்தை தனக்கு ஏற்றாட் போல் பயன்படுத்துபவர்களுக்கு நிச்சயம் எதிர்காலத்தில் தண்டனை உண்டு என்றார்.