கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் மதிப்பீட்டின் பிரகாரம் கடந்த ஏப்ரல் மாதம் 35.3 சதவீதமாகப் பதிவாகியிருந்த பணவீக்கம், கடந்த மேமாதம் 25.2 சதவீதமாக பெருமளவால் வீழ்ச்சியடைந்துள்ளது.
இப்பணவீக்க வீழ்ச்சிக்கு கடந்த மாதம் உணவு மற்றும் உணவல்லாப்பொருட்களின் விலைகளில் ஏற்பட்ட வீழ்ச்சியே காரணமென மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதன்படி கடந்த ஏப்ரலில் 30.6 சதவீதமாகப் பதிவான உணவுப்பணவீக்கம் மேமாதம் 21.5 சதவீதமாகவும், ஏப்ரல் மாதம் 37.6 சதவீதமாகப் பதிவான உணவல்லாப்பணவீக்கம் மேமாதம் 27 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது.
மேலும் கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெணின் மாதாந்த மாற்றம் கடந்த மேமாதம் (-0.02) சதவீதமாகப் பதிவானது. இச்சிறிய மாதாந்த மாற்றத்துக்கு கடந்த மாதம் உணவுப்பொருட்களின் விலைகளில் அவதானிக்கப்பட்ட 0.53 சதவீத விலை அதிகரிப்புக்கள், உணவல்லாப்பொருட்களின் விலைகளில் ஏற்பட்ட (-0.56) சதவீத அதிகரிப்புக்களை எதிரீடு செய்தமை காரணமாக அமைந்தது.
அதேவேளை பொருளாதாரத்தின் அடிப்படைப்பணவீக்கத்தைப் பிரதிபலிக்கின்ற மையப்பணவீக்கம் கடந்த ஏப்ரலில் 27.8 சதவீதத்திலிருந்து மேமாதம் 20.3 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
இந்நிலையில் அண்மையகாலங்களில் பின்பற்றப்பட்டுவரும் இறுக்கமான நாணய மற்றும் இறைக்கொள்கையின் விளைவாக வீழ்ச்சியடைந்துள்ள பணவீக்கமானது இவ்வாண்டு முழுவதும் தொடரும் எனவும், இவ்வாண்டின் பிற்பகுதியில் பணவீக்கமானது ஒற்றை இலக்கப்பெறுமதிக்குக் கொண்டுவரப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.