இலங்கை பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழு மற்றும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனை நிலையம் இணைந்து நடாத்திய புதிர்ப் போட்டியில் யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் வணிகபீடம் முதலாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.
“பல்கலைக்கழக மாணவர்களிடையே மூலதனச் சந்தை தொடர்பான அறிவினைப் விருத்தி செய்வதன் மூலம் முதலீட்டு நடவடிக்கைகளில் தேர்ச்சி பெறுதலும் எதிர்காலத்தை வடிவமைத்தலும்” என்ற தொனிப்பொருளில் இலங்கை பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழு மற்றும் கொழம்பு பங்குப் பரிவர்த்தனை நிலையம் என்பன இணைந்து நடாத்திய மூலதனச்சந்தைப் புதிர் போட்டி (Capital Market Quiz Competition), அண்மையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிகபீட அரங்கில் இடம்பெற்றது.
இந்தப் போட்டியில் யாழ் பல்கலைக்கழகத்தின் 7 பீடங்களைச் சேர்ந்த 19 அணிகள் பங்குபற்றின. ஒவ்வொரு அணியும் 4 உறுப்பினர்களைக் கொண்டமைந்திருந்தன.
பீடங்களுக்கு இடையிலான போட்டியில் முதலாம் இடத்தை முகாமைத்துவக் கற்கைகள் வணிகபீட ஏ அணியும், இரண்டாம் இடத்தை பொறியியல் பீட அணியும், மூன்றாம் இடத்தை முகாமைத்துவக் கற்கைகள் வணிகபீட பி அணியும், பெற்றுக் கொண்டன.
பீடங்களுக்கிடையிலான போட்டியில் வெற்றியீட்டிய அணிகள் அடுத்த மாதமளவில் தேசிய ரீதியில் நடைபெறவுள்ள பல்கலைக் கழகங்களுக்கு இடையிலான போட்டியில் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.