தேர்ஸ்டன் கல்லூரிக்கும் இஸிபத்தன கல்லூரிக்கும் இடையில் நடைபெற்ற டபிள்யூ. ஏ. ரோஹன சவால் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் இஸிபத்தன கல்லூரி வெற்றிபெற்றது.
14, 16, 20 வயதுப் பிரிவு அணிகளுக்கும் பழைய மாணவர்களுக்கும் இடையில் நடைபெற்ற இப் போட்டிகளில் சகல பிரிவுகளிலும் இஸிபத்தன வெற்றிபெற்று வரலாறு படைத்தது.
இந்த அங்கரார்ப்பண கால்பந்தாட்டப் போட்டி கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் கடந்த வார இறுதியில் நடைபெற்றது.
20 வயதுக்குட்பட்ட பிரிவினருக்கு இடையிலான போட்டி கிரிக்கெட் மற்றம் றக்பியைப் போன்று அங்குரார்ப்பண மாபெரும் கால்பந்தாட்டப் போட்டியாக நடத்தப்பட்டது.
இந்தப் போட்டியின் ஆரம்பப் பகுதி சுவாரஸ்மின்றி நடந்த வண்ணம் இருந்தது. இரண்டு அணியினரும் பந்தை அங்கும் இங்கும் உதைத்துக்கொண்டு இருந்தனரே தவிர கோல் போடும் முயற்சிகள் அரிதாகவே காணப்பட்டது.
தலா 40 நிமிடங்களைக் கொண்ட இப் போட்டியில் 27ஆவது நிமிடத்திலேயே தேர்ஸ்டன் அணியினர் கோல் போடுவதற்கான முதலாவது முயற்சியில் ஈடுபட்டனர்.
அணித் தலைவர் திமிர லக்ஷான் கோலை நோக்கி வேகமாக உதைத்த பந்தை இஸிபத்தன கோல்காப்பாளர் ஆக்கிப் சுஹெய்ல் மிகவும் சாமர்த்தியமாக இடதுபுறமாக தாழ்வாகத் தாவி கைகளால் தட்டி வெளியே தள்ளினார்.
இடைவேளையின் பின்னர் 50ஆவது நிமிடத்திலும் 62ஆவது நிமிடத்திலும் தேர்ஸ்டன் கல்லூரிக்கு கிடைத்த இரண்டு வாய்ப்புகளை திமிர லக்ஷான் தவறவிட்டார்.
போட்டி முடிவடைய 3 நிமிடங்கள் இருந்தபோது அம்மார் நஸீர் 35 யார் தூரத்திலிருந்து உதைத்த ப்றீ கிக்கை அப்துல் ஆத்திக், பின்னோக்கி தலையால் முட்டி கோல் போட எடுத்த முயற்சி தவறிப்போனது.
இறுதியில் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்ததால் வெற்றி அணியைத் தீர்மானிக்க மத்தியஸ்தர் அமுல்படுத்திய பெனல்டி முறையில் 3 – 2 என இஸிபத்தன வெற்றிபெற்றது.
தேர்ஸ்டன் சார்பாக திமிர லக்ஷான், நெத்மின பண்டார ஆகிய இருவரே பெனல்டிகளை இலக்கு தவறாமல் உதைத்தனர். நெத்துபுல் லசந்தவின் பெனல்டியை இஸிபத்தன கோல்காப்பாளர் தடுத்து நிறுத்தினார். அக்கலன்க பூர்ணிம பண்டாரவின் பெனல்டி இலக்கு தவறியது.
இஸிபத்தன சார்பாக அப்துல் ஆத்திக், எம். ஷபிக், உஷான் கவிந்து ஆகியோர் பெனல்டிகளை கோலினுள் புகுத்தினர். ஏ. பாரிஸின் பெனல்டியை தேர்ஸ்டன் கோல்காப்பாளர் பெஹசர விஜயசிறி தடுத்து நிறுத்தினார்.
இதேவேளை 14 வயதுக்குட்பட்ட பிரிவில் தேர்ஸ்டனை 3 – 1 என்ற கோல்கள் அடிப்படையில் இஸிபத்தன வெற்றிகொண்டது.
16 வயதுக்குட்பட்ட பிரிவில் தேர்ஸ்டனை 1 – 0 என இஸிபத்தன வெற்றிகொண்டது.
பழைய மாணவர்களுக்கு இடையிலான போட்டியில் தேர்ஸ்டனை 4 – 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் இஸிபத்தன வெற்றிகொண்டது.
விடேச விருதுகள்
20 வயதின் கீழ்
சிறந்த வீரருக்கான தங்க பாதணி: திமிர லக்ஷான் (தேர்ஸ்டன்)
சிறந்த கோல்காப்பாளருக்கான தங்க கையுறை: ஆக்கிப் சுஹெய்ல் (இஸிபத்தன).
16 வயதின் கீழ்
சிறந்த வீரருக்கான தங்க பாதணி: அஹமத் ஆமிஷ் (இஸிபத்தன)
சிறந்த கோல்காப்பாளருக்கான தங்க கையுறை: அஹமத் உமர் ஹுனெய்ஸ் (இஸிபத்தன)
14 வயதின் கீழ்
சிறந்த வீரருக்கான தங்க பாதணி: தருஷ சானக்க (இஸிபத்தன)
சிறந்த கோல்காப்பாளருக்கான தங்க கையுறை: சித்துல பெரேரா (தேர்ஸ்டன்)
பழைய மாணவர்
சிறந்த வீரருக்கான தங்க பாதணி: மெத்யூ ஜோன் (இஸிபத்தன)
சிறந்த கோல்காப்பாளருக்கான தங்க கையுறை: தேவிந்த பத்திரணகே (இஸிபத்தன)
(பட உதவி: திபப்பரே.கொம்)