வலியுறுத்தும் அவதானிப்பு மையம்
ஸ்ரீலங்கா அரசு ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்திய இனப்படுகொலைக்கு நீதி வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள உலகத் தமிழர்களின் கோரிக்கையை பன்னாட்டு சமூகம் ஏற்று மதிப்பளித்து நீதியை நிலைநாட்ட முன்வரவேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அனைத்துலக அவதானிப்பு மையம், தவறும் ஒவ்வொரு கணங்களிலும் ஈழத் தமிழர்கள் மீதான இனவழிப்பு ஊக்குவிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. இது தொடர்பில் அவதானிப்பு மையம் மேலும் தெரிவித்துள்ளதாவது:
இலங்கையில் இனப்படுகொலை
தமிழ் ஈழ மக்களுக்கு எதிராக ஸ்ரீலங்கா அரசு வரலாறு முழுவதும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பை முன்னெடுத்து வருகின்றது. இதன் வெளிப்பாடுகளில் ஒன்றாக பாரிய போரின் வாயிலாக பெரும் இனப்படுகொலைகளை பல்வேறு கட்டங்களாக நடாத்தியுள்ளது. ஸ்ரீலங்கா அரசு சுதந்திரம் பெற்றதன் பின்னர் 1958ஆம் ஆண்டு இனப்படுகொலை தொடங்கி, 83 ஜூலை இனப்படுகொலை கடந்தும் பல்வேறு படுகொலைகளை நிகழ்த்தி இனவழிப்பில் இலங்கை அரசு ஈடுபட்டது.
இந்த நிலையில் மிகப் பெரும் இனப்படுகொலையாக உலகின் மிக மோசமான இனப்படுகொலை முறைகளைப் பயன்படுத்தி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் ஸ்ரீலங்கா அரசு ஈடுபட்டது. போரின் இறுதியில் மனித குலம் அஞ்சி அதிர்ச்சியடையும் விதமான இனப்படுகொலைக் குற்றங்களில் ஸ்ரீலங்கா அரசு ஈடுபட்டமைக்கான ஆதாரங்கள் உலகம் முழுவதிலும் வெளியாகி இருந்தது. இதன்படி இறுதிப் போரில் மாத்திரம் ஒன்றரை லட்சம் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
பிரிட்டனிடம் கோரிக்கை
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலை இடம்பெற்றது என்ற உண்மையை பிரதமர் ரிஷி சுனாக் தலைமையிலான பிரிட்டன் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும், அவ்வாறு ஏற்றுக்கொள்வதற்கு தீர்ப்பாயமொன்று அவசியமெனில், அதனை உள்ளக ரீதியிலோ அல்லது ஏனைய நாடுகளுடன் இணைந்தோ நிறுவவேண்டும் என்றும் உலகளாவிய ரீதியில் வாழும் 300 க்கும் மேற்பட்ட தமிழர்களின் கையெழுத்துடன்கூடிய மனுவின் ஊடாக இனப்படுகொலையைத் தடுத்தல் மற்றும் வழக்குத்தொடரலுக்கான சர்வதேச நிலையம் வலியுறுத்தியுள்ளது.
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பில் சர்வதேச சமூகமும் ஊடகங்களும் அமைதிகாத்துவருவது எமக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக குறித்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன் இனப்படுகொலை இடம்பெற்று 14 வருடங்கள் கடந்துள்ள நிலையில், அந்த உண்மையை ஏற்றுக்கொள்வதற்கோ அல்லது குரலற்ற மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கோ சர்வதேச சமூகத்தினால் இதுவரையில் எந்தவொரு ஆக்கபூர்வமான நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை என்றும் ஆதங்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரகடனப்படி இனப்படுகொலையே
ஐக்கிய நாடுகள் சபையினால் கடந்த 1948 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இனப்படுகொலை தொடர்பான பிரகடனத்தின் வரைவிலக்கணமானது, சுதந்திர இலங்கையில் ஈழத்தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற சம்பவங்களுடன் பொருந்துகின்றது என்றும் இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றது என்ற கருத்தை நிரூபிப்பதற்கான பல சான்றாதாரங்கள் காணப்படுகின்ற போதிலும், இதுகுறித்து இன்னமும் விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் குறித்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களுக்கு அமெரிக்கா மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து இணையனுசரணை வழங்கியதன் மூலம் தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கு பிரிட்டன் மேற்கொண்ட முயற்சியை வரவேற்று பாராட்டியுள்ளதுடன் தமிழ்மக்கள் இலங்கை அரசாங்கங்களினால் திட்டமிட்டு நிகழ்த்தப்படும் உடலியல் ரீதியானதும், கட்டமைப்பு மற்றும் கலாசார ரீதியானதுமான இனப்படுகொலையை அனுபவித்தார்கள் – அனுபவித்து வருகின்றார்கள் என்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா மீது தடை வேண்டும்
ஈழத்தமிழர்களிற்கு எதிராக இலங்கையில் இனஅழிப்பு குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தொடர்ந்தும் ஈடுபட்டுக்கொண்டிருப்பவர்களிற்கு எதிராக அவுஸ்திரேலிய அரசாங்கம் தடைகளை விதிக்கவேண்டும் என தமிழ் ஏதிலிகள் பேரவை வலியுறுத்தியுள்ளதுடன் அவுஸ்திரேலிய அரசாங்கம் இனப்படுகொலை இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவதை நிறுத்திவிட்டு இனப்படுகொலைக்கான சாட்சிகளாக உள்ளவர்களிற்கு உதவவேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மனித உரிமை மீறல்கள் காரணமாக இலங்கையின் வடமேல்மாகாணத்தின் ஆளுநர் வசந்தகரணாகொடவும் அவரது குடும்பத்தினரும் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு அந்த நாட்டு அரசாங்கம் தடை விதித்துள்ளது என்றும் இதுபோன்ற அணுகுமுறைகளை பின்பற்றி அவுஸ்ரேலியா அரசாங்கமும் செயற்பட வேண்டும் என்றும் ஈழத் தமிழ் மக்களின் சார்பில் அவுஸ்ரேலியாவை தளமாகக் கொண்ட தமிழ் ஏதிலிகள் பேரவை முன்வைத்த கோரிக்கையையும் இங்கே கவனிக்க வேண்டியது.
பொருளதார நெருக்கடியிலும் இனப்படுகொலை
இலங்கையில் பாரிய பொருளாதார நெருக்கடி நிலவுவது சர்வதேச சமூகம் நன்கு அறிந்த விடயமாகும். இதிலிருந்து மீள்வதற்கு சர்வதேச சமூகத்தின் நிதி மற்றும் அனுசரனைகளை ஸ்ரீலங்கா அரசு கோரி வருகின்றது. ஆனாலும் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலையிலும் கூட ஈழத் தமிழ் மக்களுக்கு எதிரான கட்டமைக்கப்பட்ட இனவழிப்பை ஸ்ரீலங்கா அரசு நிறுத்தாவது தொடர்வதை அமெரிக்கா, பிரிட்டன், கனடா, அவுஸ்ரேலியா போன்ற பன்னாட்டு சமூகத்தினர் கூர்ந்து கவனிக்க வேண்டும்.
ஈழத் தமிழ் மக்களின் தாயகப் பரப்பில் உள்ள ஆலயங்களை அழித்தல், ஆக்கிரமிப்பில் ஈடுபடுதல் போன்ற கடும் இனவாத போக்கு நடவடிக்கைகளின் வாயிலாக வடக்கு கிழக்கு மக்கள் பெரும் பண்பாட்டு மற்றும் உள நெருக்கடி தாக்கங்களுக்கு உள்ளாகியுள்ளனர். வெடுக்குநாறி மலை, குருந்தூர் மலை, நிலாவரை, நாவற்குழி, மயிலிட்டி, மண்ணித்தலை, உருத்திரபுரம், கச்சதீவு, கன்னியா வெந்நீரூற்று போன்ற பல இடங்களை ஸ்ரீலங்கா அரசு இலக்கு வைத்து செயற்படுவது ஊடகங்களின் வாயிலாக வெளிவரும் விடயங்களாகும்.
எனவே ஸ்ரீலங்கா அரசு 2009இற்குப் பின்னரும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பை தீவிரப்படுத்தி வருகின்றது. இதனால் ஸ்ரீலங்கா அரசு மீது உடன் நடவடிக்கை எடுக்க வெண்டும் என்பதை ஈழத் தமிழ் மக்கள் களத்தில் தொடர்ந்து வலியுறுத்தி வந்தமையின் தொடர்ச்சியாக பிரிட்டன் மற்றும் அவுஸ்ரேலியாவில் வாழும் மக்களும் வலியுறுத்தி உள்ளனர். இதனை ஏற்று ஸ்ரீலங்கா அரசு மீது அது நிகழ்த்திய தமிழ் இனப்படுகொலைக்காக பன்னாட்டு விசாரணையை மேற்கொண்டு நீதியை நிலை நாட்ட பன்னாட்டு சமூகம் உடன் முன்வரவேண்டும் என்று வலியுறுத்துகிறோம்…” என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.