ஜனாதிபதி செயலகம் ஓய்வுபெற்ற படையினரால் முற்றுகை – கொழும்பில் சற்று பதற்ற நிலை
மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள படையினரை அகற்ற முடியாது ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினர் பெரும் குழப்பத்தில் உள்ளதாக கூறப்படுகின்றது.
போரின் போது அவையவங்களை இழந்துள்ள ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் தமக்கு ஓய்வூதியம் வழங்குமாறு வலியுறுத்தி இரண்டாவது நாளாக மீண்டும் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று முற்பகல் முதல் புறக்கோட்டை ஒல்கொட் மாவத்தையில் போராட்டத்தை ஆரம்பித்த ஓய்வுபெற்ற படையினர் ஜனாதிபதி செயலக பிரதான வாயிலை வழி மறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றவர்கள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்திக்க அனுமதிக்குமாறு கோரியே இந்த முற்றுகைப் போராட்டத்தை தொடர்ந்துள்ளனர்.
போரில் அங்கவீனமான இவர்கள் தமது செயற்கை அவையவங்களை வீதியில் போட்டு இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இவர்களை அகற்ற முடியாது ஜனாதிபதி பாதுகாப்புப் படையினர் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.
அவையங்களை இழந்த படையினரை, பலத்தை பிரயோகித்து அகற்ற நடவடிக்கை எடுத்தால் அது ஜனாதிபதிக்கும், அரசாங்கத்திற்கும் எதிராக சிங்கள மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகளை தோற்றுவித்துவிடும் என்பதால் ஜனாதிபதி பாதுகாப்புப் படையினர் முன்னாள் படையினர் விடயத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காது வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் இவ்வாறான போராட்டங்களை இராணுவ வீரர்கள் தவிர்த்து ஏனையவர்கள் நடத்தியிருந்தால் அவர்கள் மீது அதிகபட்ச படைப் பலம் பிரயோகிக்கப்பட்டு அகற்றப்பட்டிருப்பார்கள்.
குறிப்பாக ஜனாதிபதி செயலகம் அமைந்துள்ள பிரதேசத்திற்குள் நுழைவதற்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருவது வழமை என்பதும் இங்கு சுட்டிக்காட்டப்படத்தக்கது.
இதேவேளை இவர்களின் இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக ஜனாதிபதி செயலகத்தின் செயற்பாடுகள் முழுமைப் படுத்த முடியாத நிலையில் முடக்க நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.