நியூஸிலாந்து அணிக்கெதிரான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பெற்றுக்கொண்ட வெற்றியின் மூலமாக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் 500 ஆவது வெற்றியை பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பதிவு செய்தது.
பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுலா மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து கிரிக்கெட் அணிக்கும், பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டி ராவல்பிண்டியில் நேற்று முன்தினம் (27) பகலிரவுப் போட்டியாக நடைபெற்றது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 288 ஓட்டங்களை குவித்தது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, பக்கார் ஸமானின் சதத்தின் உதவியுடன் 48.3 ஓவர்களில் 291 ஓட்டங்கள் குவித்து 5 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது.
இந்த வெற்றியின் மூலமாக சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 500 வெற்றிகளை ஈட்டிய 3 ஆவது அணியென்ற சிறப்பை பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பதிவு செய்தது. இந்த 500 ஆவது வெற்றியை, பாகிஸ்தான் தனது 949 ஆவது போட்டியின்போது பெற்றிருந்தது.
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பாகிஸ்தானுக்கு முதல், அவுஸ்திரேலியா (594 , இந்தியா (539) ஆகிய இரண்டு அணிகள் மாத்திரமே 500 க்கும் அதிகமான வெற்றிகளை பதிவு செய்துள்ளன. மேலும்,தற்போது 500 ஆவது வெற்றியை பதிவு செய்துள்ள பாகிஸ்தானுக்கு அடுத்தப்படியாக மேற்கிந்தியத் தீவுகள் (411), தென் ஆபிரிக்கா (399), இலங்கை (399) , இங்கிலாந்து (392), நியூஸிலாந்து (368), பங்களாதேஷ் (149) , ஸிம்பாப்வே (147) ஆகியன அடுத்தடுத்து காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.