சீனாவில் உள்ள மிருகக்காட்சிசாலைக்காக இலங்கையிலிருந்து குரங்குகளை பெற முயன்ற சீனாவின் விலங்குகள் வளர்ப்பு நிறுவனம் குறித்த மேலதிக விபரங்களை இலங்கை அரசாங்கம் கோரியுள்ளது.
இலங்கையிலிருந்து குரங்குகளை கோரிய சீன நிறுவனத்தின் விபரங்களை தருமாறு சீன தூதரகத்தை கேட்டுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை குரங்குகளைஏற்றுமதி செய்வது சாத்தியமா என்பது குறித்து ஆராய்வதற்காக குறிப்பிட்ட நிறுவனத்தின் பிரதிநிதிகளை அமைச்சர் மகிந்த அமரவீர மூன்று தடவை சந்தித்துள்ளார்.
இதேவேளை கிடைத்த தகவல்களை ஆராய்ந்தவேளை குறிப்பிட்ட சீன நிறுவனம் 2021 இல் சிறிய முதலீட்டுடன் பதியப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக இலங்கையின் வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு சமூகம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
சீன நிறுவனம் இலங்கையின் விவசாய அமைச்சிற்கு அனுப்பியுள்ள கடிதம் குறித்து சந்தேகம் வெளியிட்டுள்ள இலங்கை அமைப்பு அந்த கடிதத்தில் கையெழுத்து எதுவுமில்லை தொடர்புகொள்ளவேண்டிய நபரின் பெயர்கள் இல்லை நிறுவனத்தின் இலச்சினை தலைகீழாக காணப்படுகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளது.
இதுசீன மொழி தெரியாத நபர் ஒருவரின் மோசடி நடவடிக்கை போல தோன்றுகின்றது எனவும் இலங்கை அமைப்பு தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட சீன நிறுவனம் இன்னமும் செயற்படத்தொடங்கவில்லை என எங்களிற்கு தகவல் கிடைத்துள்ளது என இலங்கையின் வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு சமூகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை சீன நிறுவனத்தின் பிரதிநிதிகளை அமைச்சர் மகிந்த அமரவீர மூன்று தடவை சந்தித்துள்ளார்.
தெங்கு அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் ரொசான் பெரேரா இந்த சந்திப்புகளிற்கு ஏற்பாடு செய்தார் என தெரிவித்துள்ள அமைச்சர் விவசாய அமைச்சின் கீழ் உள்ள தேசிய உணவு ஊக்குவிப்பு சபைக்கு சீன நிறுவனம் கடிதம் அனுப்பியதை தொடர்ந்தே இந்த சந்திப்பு இடம்பெற்றது எனவும் தெரிவித்துள்ளார்.
எனினும் தான் இந்த விடயத்தில் தொடர்புபடவில்லை என பேராசிரியர் ரொசான் பெரேரா தெரிவித்துள்ளார்.
sunday times