புத்தகங்களை விட சிறந்த நண்பன் வேறில்லை என்பதை புத்தக பிரியர்கள் மனமார ஒப்புக்கொள்வார்கள். அதே போல, “சொர்கம் என்பது ஒரு வகையான நூலகம் போல இருக்கும் என்றே எப்போதும் கற்பனை செய்திருக்கிறேன்” என்று லத்தீன் அமெரிக்க எழுத்தாளர் ஜார்ஜ் போர்ஹேவின் கருத்தையும் குதூகலத்துடன் ஏற்றுக்கொள்வார்கள்.
ஒரு புத்தகம் என்பது கடந்த காலத்திற்கும், எதிர்காலத்திற்குமான இணைப்பு, தலைமுறைகள் மற்றும் கலாச்சாரங்களுக்கு இடையிலான பாலம்” என்கிறது யுனெஸ்கோ அமைப்பின் உலக புத்தக தினம் தொடர்பான இணைய பக்கம். புத்தகங்கள் ஒட்டுமொத்த மனித குலத்தை ஒரு குடும்பமாக இணைக்க உதவுகின்றன என்றும், மனித குலத்தின் லட்சியங்களை பிரதிபலிக்கும் வகையில் சேர்ந்திசை போல ஒலிக்கும் குரல்களை கொண்டாடும் நோக்கத்துடன் உலக புத்தக மற்றும் காப்புரிமை தினம் அமைந்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
1995 ம் ஆண்டு முதல் யுனெஸ்கோ அமைப்பு ஏப்ரல் 23 ம் தேதியை உலக புத்தக மற்றும் காப்புரிமை தினமாக கொண்டாடி வருகிறது. உலக புத்தக தினம் என்றும் இது அழைக்கப்படுகிறது. சர்வதேச பதிப்பாளர்கள் சங்கம், சர்வதேச புத்தக விற்பனையாளர்கள் கூட்டமை மற்றும் நூலக சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து புத்தக தினம் கொண்டாடப்படுகிறது.
* புத்தக தினமாக கொண்டாடப்படும் ஏப்ரல் 23 ம் தேதி , உலகப்புகழ் பெற்ற டான் குவிக்சாட் நாவலை எழுதிய எழுத்தாளர் செர்வாண்ட்ஸ் நினைவு தினம் என்பது குறிப்பிடத்தக்கது. உலக மகாகவி வில்லியம் ஷேக்ஸ்பியர் மற்றும் இன்கா கார்சிலாசோ டி லா வேகா ஆகியோரும் இந்த தினத்தில் தான் மறைந்தனர். மேலும் விலாதிமீர் நொபோகோவ்ம் மவுரீஸ் டூரான், ஜோசப் பிளா உள்ளிட்ட எழுத்தாளர்களின் பிறந்த தினமாகவும் இது அமைகிறது.
* உலக புத்தக தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் கண்காட்சி, கருத்தரங்கள் உள்ளிட்ட பலவேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
* 1995 ல் முதல் உலக புத்தக தினம் கொண்டாடப்பட்டது.
* உலக புத்தக தினத்தை முன்னிட்டு 2001 ம் ஆண்டு முதல் குறிப்பிட்ட ஒரு நகரம் உலக புத்தக தலைநகராக தேர்வு செய்யப்பட்டு, புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் பல்வேறு நிகழ்ச்சிகள நடத்தப்பட்டு வருகின்றன. ஸ்பெய்னின் மாட்ரிட் முதல் உலக புத்தக தலைநரகமாக தேர்வு செய்யப்பட்டது.
* கடந்த ஆண்டு தென் கொரியாவின் இன்சியான் உலக புத்தக தலைநகராக தேர்வு செய்யப்பட்டது. இந்த ஆண்டு போலந்து நாட்டின் வரோக்லா (Wrocław) நகரம் உலக புத்தக தலைநகராக தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் முதல் இந்நகரில் புத்தக தினம் தொடர்பான சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
கடந்த ஆண்டு இந்த நகரில், சர்வதேச எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு பொது போக்குவரத்தில் புத்தகம் வாசித்த படி சென்றால் டிக்கெட் வாங்க வேண்டிய அவசியமில்லை என அறிவிக்கப்ப்ட்டது குறிப்பிடத்தக்கது.
• இந்தியா உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் புத்தக தினம் கொண்டாடப்படுகிறது. சென்னையில் 3 நாள் புத்தக கண்காட்சி நடைபெறுகிது.
• கினியா குடியரசில் உள்ள கோனாக்ரே (Conakry) நகரம் 2017 ம் ஆண்டுக்கான உலக புத்தக தலைநகராக தேர்வு செய்யப்பட்டுள்ளது. உலகின் 17 வது உலக புத்தக தலைநகரமாக இது திகழ்கிறது.
• உலக புத்தக தினத்தை முன்னிட்டு டிவிட்டரில் #BookDay எனும் ஹாஷ்டேகுடன் புத்தக பிரியர்கள் மற்றும் எழுத்தாளர்கள் குறும்பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.
• 2016 உலக புத்தக தினம் வில்லியம் ஷேக்ஸ்பியரின் 400 வது நினைவு தின ஆண்டாகவும் அமைகிறது. செர்வாண்டிசின் 400 வது நினைவு தின ஆண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது.
• உலக புத்தக தினத்தை முன்னிட்டு சர்வதேச புகைப்பட போட்டியும் யுனெஸ்கோவால் நடத்தப்படுகிறது. #WordsofTolerance எனும் ஹாஷ்டேக் மூலம் சமூக ஊடகங்களில் புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் பிரச்சார இயக்கமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.