அமெரிக்காவின் பொக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு எதிராக, வாக்களிப்பு இயந்திர நிறுவனமொன்று தாக்கல் செய்த அவதூறு வழக்கை விசாரணையின்றி முடித்துக் கொள்வதற்காக 787.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க பொக்ஸ் நியூஸ் சம்மதித்துள்ளது
அவுஸ்திரேலிய கோடீஸ்வரர் ரூபர்ட் மர்டோக்குக்கு சொந்தமான ஓர் ஊடக நிறுவனம் பொக்ஸ் நியூஸ் (Fox News).
2020 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் தான் தோல்வியடையவில்லை எனவும், தனது வெற்றியானது மோசடியான முறையில் பறிக்கப்பட்டது எனவும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறினார்.
இந்நிலையில், ட்ரம்புக்கு எதிராக வாக்களிப்பு இயந்திரங்களில் மோசடி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டமை தொடர்பில், பொக்ஸ் நியூஸுக்கு எதிராக டொமினியன் எனும் வாக்களிப்பு இயந்திர நிறுவனம் அவதூறு வழக்கு தொடுத்தது.
இவ்வழக்கு விசாரணை நேற்று செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்படவிருந்தது.
எனினும்,இரு தரப்பினரும் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக இறுதி நேரத்தில் நீதிபதி எரிக் டேவிஸ் அறிவித்தார்.
1.6 பில்லியன் டொலர்களைக் கோரி டொமினியன் நிறுவனம் வழக்குத் தொடுத்தது. அதில் அரைவாசியான 787.5 மில்லியன் டொலர்களை இழப்பீடாக வழங்குவதற்கு பொக்ஸ் நியூஸ் நிறுவனம் சம்மதித்துள்ளது.
இது தொடர்பாக பொக்ஸ் நியூஸ் நிறுவனம் விடுத்த அறிக்கையில், இவ்விவகாரம் முடிவுக்கு வந்தமை குறித்து மகிழ்ச்சியடைவதாகவும், டொமினியன் நிறுவனம் தொடர்பான சில கூற்றுகள் பொய்யானவை என நீதிமன்றம் கண்டறிந்ததை தான் ஏற்றுக்கொள்வதாகவும் தெரவித்துள்ளது.