மலேஷியாவில் நடைபெற்ற மலேஷிய அழைப்பு சம்பியன்ஷிப் நீச்சல் போட்டியில் நடிகர் மாதவனின் மகனான வேதாந்த் நீச்சல் போட்டியில் இந்தியாவுக்கு 5 தங்க பதக்கங்களை வென்று கொடுத்து பெருமை சேர்த்துள்ளார்.
58 ஆவது ‘மலேஷியன் இன்விட்டேஷனல் ஸ்விம்மிங் சம்பியன்ஷிப்’ மலேஷியாவின் தலைநகரான கோலாலம்பூரில் கடந்த 13 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரையான 4 நாட்கள் நடைபெற்றிருந்தது.
இப்போட்டித் தொடரில் இந்திய அணி சார்பாக 8 பேர் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தனர். இதில் தென் இந்திய நடிகரான மாதவனின் மகனான வேதாந்த்தும் பங்கேற்றிருந்தார்.
ப்றீஸ்டைல் வகையான நீச்சல் போட்டிகளில் பங்கேற்றிருந்த மாதவன் வேதாந்த், ஆண்களுக்கான 50 மீற்றர் (24.43 செக்கன்கள்) , 100 மீற்றர் (52.47 செக்கன்கள்) , 200 மீற்றர் (1 நிமிடம் 57.10 செக்கன்கள்), 400 மீற்றர் (4 நிமிடங்கள் 01.01 செக்.) மற்றும் 1500 மீற்றர் (16 நிமிடங்கள் 08.23 செக்கன்களில்) என அவர் பங்கேற்றிருந்த 5 போட்டிகளிலும் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.
நாடுகள் ரீதியாகவும், மாநிலங்கள் ரீதியாகவும் 19 அணிகள் பங்கேற்றிருந்த இப்போட்டித் தொடரின் பதக்கப் பட்டியலின் முதலாவது இடத்தை கைப்பற்றிய இந்தோனேஷியா 42 தங்கம், 26 வெள்ளி, 23 வெண்கலம் அடங்கலாக மொத்தமாக 91 பதக்கங்களை வென்றிருந்தது.
28 தங்கம், 44 வெள்ளி, 30 வெண்கலம் என மொத்தமாக 102 பதக்கங்களை வென்ற மலேஷியாவின் பிரா செலொங்கர் மாநில அணி இரண்டாவது இடத்தை பிடித்ததுடன், மற்றுமொரு மாநில அணியாக பங்கேற்ற கோலா லம்பூர் அணி 26 தங்கம், 27 வெள்ளி, 23 வெண்கலம் என 76 பதக்கங்கள் வென்று மூன்றாவது இடத்தை பிடித்தது.
பதக்கப் பட்டியலில் இந்திய அணி 5 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தமாக 11 பதக்கங்கள் கைப்பற்றிய இந்திய அணி 8 ஆவது இடத்தை பிடித்தது. இதில் இந்திய அணி கைப்பற்றிய 5 தங்கப் பதக்கங்களுமே, மாதவன் வேதாந்த் சுவீகரித்தவை என்பது விசேட அம்சமாகும்.
தனது மகனின் வெற்றியை, நடிகர் மாதவன் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில், கடவுளின் கருணையாலும் மற்றும் உங்களுடைய வாழ்த்துகளாலும் எனது மகன் 5 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். அவரின் வெற்றி எனக்கு பெரும் மகிழ்ச்சியை தேடித் தந்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.