தொல்பொருள் திணைக்களத்தை முன்னிலைப்படுத்தி வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களின் பூர்வீக காணிகள் சுபீகரிக்கப்படுகின்றன.
இனவாத செயற்பாடுகளை நிறுத்தாவிட்டால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை முடக்குவோம், இனவாத அமைச்சர்கள் தமிழ் மக்கள் மத்தியில் செல்ல முடியாத நிலைமையை தோற்றுவிப்போம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.
சபாநாயகர் தலைமையில் இன்று (04) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் வாய்மூல விடைக்கான வினாக்களின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
அமைச்சரே புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவை நோக்கி) நீங்கள் ஒரு இனவாதி கடந்த காலங்களில் மட்டக்களப்பு மாவட்டம் குசலானமலைக்கு வந்த போது மக்கள் உங்களை விரட்டியடித்தார்கள், அதனால் தான் குசனாலமலையில் இன்று சைவ மத வழிபாடுகள் இடம்பெறுகிறது.
தொல்பொருள் திணைக்களத்தை முன்னிலைப்படுத்தி நாட்டில் மீண்டும் பிரச்சினைகளை தோற்றுவிக்கும் செயற்பாடுகள் மாத்திரம் முன்னெடுக்கப்படுகிறது.
வவுனியாவில் வெடுக்குநாறியில் பிரச்சினை, குறுந்தூர் மலையில் பிரச்சினை, குசலானமலையில் பிரச்சினை தற்போது திருகோணமலை அரிசிமலையில் பிரச்சினை என பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகிறது.
தொல்பொருள் சின்னங்களை பாதுகாக்க வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கிறோம், தொல்பொருள் மரபுரிமைகளை பாதுகாக்க வேண்டுமாயின் சர்வதேச மட்டத்தில் தொல்பொருள் நிபுணத்துவம் வாய்ந்த தரப்பினரின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளுங்கள் அதனை விடுத்து ஏன் பௌத்த பிக்குகளை முன்னிலைப்படுத்தி தொல்பொருள் தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றீர்கள்.
தொல்பொருள் ஜனாதிபதி செயலணி ஊடாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் எமது மக்களின் பூர்வீக காணிகள் சுவீகரிக்கப்படுகிறது. ஒருசில அமைச்சர்கள் இனவாத செயற்பாடுகளுக்காகவே தொல்பொருள் திணைக்களத்தை பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
எமது மக்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் தொல்பொருள் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் இனவாத செயற்பாடுகளை நிறுத்தாவிட்டால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தை முடக்குவோம்.
இனவாத அமைச்சர்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு வர முடியாத அளவுக்கு செயற்படுவோம். நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ள பின்னணியிலும் தொல்பொருள் திணைக்களத்திற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இனவாதம் முடிவுக்கு வந்தால் மாத்திரமே முன்னேற்றமடைய முடியும் என்றார்.
இதன்போது எழுந்து உரையாற்றிய புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க ஒருவர் எமக்கு பரிசொன்றை வழங்கினால் அதனை நாம் ஏற்காவிட்டால், அந்த பரிசு உரிய தரப்பினருக்கு சொந்தமாகும் என்றார்.