டீசல் விலை குறைப்புக்கு அமைய பஸ் கட்டணம் 12.9 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது.இதற்கமைய குறைந்தப்பட்ச பஸ் கட்டணம் 30 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டண திருத்தம் வியாழக்கிழமை (30) நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படும் என போக்குவரத்து ஆணைக்குழு தலைவர் ஷசி வெல்கம தெரிவித்தார்.
குறைந்தபட்ச கட்டணம் 30 ரூபாவாகவும், அதிகூடிய கட்டணம் 1,175 ரூபாவாகவும் புதிய கட்டணம் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய 34 ரூபாவாக இருந்த ஆரம்பக்கட்டணம் 30 ரூபாவாகவும், 42 ரூபா கட்டணம் 37 ரூபாவாகவும்,54 ரூபா கட்டணம் 48 ரூபாவாகவும்,67 ரூபா கட்டணம் 59 ரூபாவாகவும்,80 ரூபா கட்டணம் 70 ரூபாவாகவும் அறவிடப்படும். எனவும் குறிப்பிட்டார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் புதன்கிழமை (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
கடந்த டிசெம்பர் மற்றும் ஜனவரி மாத காலப்பகுதியில் டீசலின் விலை 25 ரூபாவினால் குறைக்கப்பட்ட போதும் பஸ் கட்டணம் திருத்தம் செய்யப்படவில்லை. அதிவேக பஸ் கட்டணங்கள் மாத்திரம் 10 சதவீதத்தால் குறைக்கப்பட்டது.
நேற்று புதன்கிழமை நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருளின் விலை குறைக்கப்பட்டன. சுப்பர் டீசலின் விலை 45 ரூபாவினாலும், ஒட்டோ டீசலின் விலை 80 ரூபாவினாலும் குறைக்கப்பட்டது. இதற்கமைய பஸ் கட்டணங்களும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
ஆரம்பக்கட்டணம் 30 ரூபாவாக தீர்மானிக்கப்பட்டுள்ளமை தொடர்பான சுற்றறிக்கை சகல மாகாணங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜீன் மாதம் 01 ஆம் திகதி பஸ் கட்டணம் திருத்தம் செய்யப்படும்.
ஏனைய பஸ் கட்டணங்கள் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும்.புதிய கட்டண திருத்தம் தொடர்பான பட்டியல் அனைத்து பஸ்களிலும் காட்சிப்படுத்தப்படும் என்றார்.
இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கம்.
டீசல் விலை குறைப்பு தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு சாதகமாக உள்ளது. ஆகவே இதன் பயனை பொது பயணிகளுக்கு வழங்க வேண்டும். கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் டீசலின் விலை 25 ரூபாவால் குறைக்கப்பட்ட போது பஸ் கட்டணம் திருத்தம் செய்யப்படவில்லை.
பஸ் கட்டணத்தை குறைக்க வேண்டும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு முன்வைத்த கோரிக்கையை முழுமையாக ஏற்றுக்கொண்டோம்.
இதற்கமைய குறைந்தப்பட்ச பஸ் கட்டணம் 30 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டமைக்கு முழுமையான இணக்கம் தெரிவித்தோம் என இலங்கை தனியார் பஸ் உரிமையார் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.