பிஜியின் முன்னாள் பிரதமர் பிராங்க் பைனிமாராமா, அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள அவர் நாளை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
பைனிமாராமாவுக்கும் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஆணையாளர் சிதிவேனி கீலிஹோவுக்கும் எதிராக அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் நாளை நீதிமன்றில் ஆஜராகவுள்ளனர் என உதவி பொலிஸ் ஆiணாயளர் சகியோ ரைகாசி தெரிவித்துள்ளார்.
புரட்சி ஒன்றையடுத்து, 2007 ஜனவரியில் பிஜியின் பிரதமராக பைனிமாராமா பதவியேற்றார். கடந்த டிசெம்சர் மாதம் நடைபெற்ற தேர்தலில் அவரின் கட்சி தோல்விடைந்தது. அதன்பின் எதிர்க்கட்சித் தலைவராக அவர் பதவி வகித்தார்.
எனினும், ஜனாதிபதி, பிரதமருக்கு எதிராக அவர் தெரிவித்த கருத்துகளையடுத்து, பாராளுமன்ற நடைமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் அவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து 2026 ஆம் ஆண்டுவரை இடைநிறுத்தப்படுவதாக கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று புதன்கிழமை பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து அவர் ராஜினாமா செய்தார்.
முன்னாள் பிரதமர் பைனிமாராமா (68) மற்றும் பொலிஸ் ஆணையாளர் கீலிஹோ மீதான விசாரணைகளின் விபரம் வெளியிடப்படவில்லை. எனினும், பிஜியின் தென் பசுபிக் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பான விசாரணையில் இவர்கள் தலையீடு செய்ததாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.