கீரிமலையில் இருந்த ஆதிசிவன் ஆலயம் இடித்து அழிக்கப்பட்ட செய்தி சைவ மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளதாக கலாநிதி ஆறு திருமுருகன் தெரிவித்தார்.
கீரிமலையில் போர்த்துக்கீசர் காலத்தில் இருந்தே அமையப்பெற்ற ஆதிசிவன் ஆலயமானது அதன் அருகே பாதாள கங்கை எனப்படும் நன்நீர் கிணற்றுடன் கூடிய சிவன் ஆலயம். இதன் அருகே சித்தர்களின் தியான மடமும் இருந்தன, அதிலே நல்லூர் தேரடிச் சித்தர் என எல்லோராலும் அறியப்பட்ட சடையம்மாவின் சமாதியுடன் சடையம்மா மடம் என்பனவும் இருந்தன.
இதேபோன்று அப்பகுதியிலே நல்லை ஆதீனத்தின் முதலாவது குரு முதல்வரான மணி ஐயரின் குருவின் சமாதி என்பன அங்கே மிக நீண்டகாலமாக இருந்தது.
அதே போன்ற பழமையான கதிரை ஆண்டவர் ஆலயமும் இருந்தது. இவ்வாறான ஆன்மீக அடையாளங்கள் அனைத்தையும் அழிக்கப்பட்டுத்தான் ஒரு ஆடம்பர மாளிகை அமைக்கப்பட்டுள்ளது என்பதனை அறியும்போது சைவ சமயந்தவர்களின் நெஞ்சம் தாங்க மறுக்கின்றது.
இவை தொடர்பில் மிக நீண்ட காலமாகவே நாம் கோரிக்கை விடுத்தபோதும் தற்போது தான் உண்மை வெளிவந்துள்ளது. இவற்றை அழித்த செயலை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இவற்றை மீள அமைத்தே ஆக வேண்டும். அந்த ஆலயங்கள் வரலாற்று சின்னங்கள் இருந்த இடங்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்பதோடு, அவற்றினை அழித்தமைக்கும் எமது வன்மையான கண்டனங்களையும் நாம் பதிவு செய்கின்றோம்.- என்றார்.