சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் வெளியிடப்பட்டுள்ள 100% கிரிக்கெட் சுப்பர் ஸ்டார்கள் இறுதி குழுவில் இலங்கையின் ஹர்ஷிதா மாதவி இடம்பிடித்துள்ளார்.
ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டி (50 ஓவர்) ஆரம்பமாவதற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் ஐசிசி தனது முதலாவது 100% கிரிக்கெட் சுப்பர் ஸ்டார்களின் இறுதி 10 பெயர்களை வெளியிட்டுள்ளது.
பேர்மிங்ஹாம் 2022 பொதுநலவாய விளையாட்டு விழாவில் வரலாற்று முக்கியம்வாய்ந்த மகளிர் கிரிக்கெட் போட்டி அறிமுகமான சூட்டுடன் 5 வீராங்கனைகளைக் கொண்ட முதலாவது தொகுதி சுப்பர் ஸ்டார்கள் குழுவை ஐசிசி அறிவித்தது.
அந்தக் குழுவில் சொஃபி எக்லஸ்டோன் (இங்கிலாந்து), அமேலியா கேர் (நியூஸிலாந்து), ஹேலி மெத்யூஸ் (மேற்கிந்தியத் தீவுகள்), ஷஃபாலி வர்மா (இந்தியா), லோரா வுல்வார்ட் (தென் ஆபிரிக்கா) ஆகிய ஐந்து வீராங்கனைகளே முதலாவதாக 100% கிரிக்கெட் சுப்பர் ஸ்டார்கள் குழுவில் பெயரிடப்பட்டிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து பாத்திமா சானா (பாகிஸ்தான்), ஸ்ம்ரித்தி மந்தானா (இந்தியா), ஏஷ்லி கார்ட்னர் (அவுஸ்திரேலியா), சொபியா டன்க்லி (இங்கிலாந்து), கெபி லூயிஸ் (அயர்லாந்து) ஆகியோர் 2ஆவது தொகுதியிலும் நிகார் சுல்தானா (பங்களாதேஷ்), நட்டாகன் சன்டாம் (தாய்லாந்து), ஜெமிமா ரொட்றிகஸ் (இந்தியா), அலானா கிங் (அவுஸ்திரேலியா), லாரா குட்ஆல் (தென் ஆபிரிக்கா) ஆகியோர் 3ஆவது தொகுதியிலும் 100% கிரிக்கெட் சுப்பர் ஸ்டார்களாக இணைக்கப்பட்டனர்.
இந் நிலையில், கடைசி தொகுதி சுப்பர் ஸ்டார்களை ஐசிசி இப்போது வெளியிட்டுள்ளது. இறுதி 10 வீராங்கனைகள் கொண்ட 100% கிரிக்கெட் சுப்பர் ஸ்டார்கள் குழுவில் பெயரிடப்பட்டுள்ள அனைவரும் தென் ஆபிரிக்காவில் இன்னும் சில தினங்களில் ஆரம்பமாகவுள்ள ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
100% கிரிக்கெட் சுப்பர் ஸ்டார்கள் குழாத்தில் இடம்பெறும் இலங்கையின் 24 வயதுடைய ஹர்ஷிதா மாதவி ஒரு நட்சத்திர மற்றும் முக்கிய துடுப்பாட்ட வீராங்கனை ஆவார்.
மிகவும் நெருக்கடியான வேளைகளில் எத்தகைய சவாலையும் துணிச்சலுடன் ஏற்று திறமையாகவும் நுட்பத் திறனுடனும் துடுப்பெடுத்தாடுவதை விரும்புபவர் ஹர்ஷிதா மாதவி. இடது கை துடுப்பாட்ட வீராங்கனையான அவர், இலங்கை மகளிர் அணியில் துடுப்பாட்டத் தூணாக திகழ்வதை மறுக்க முடியாது.
இலங்கை சார்பாக 18 மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 419 ஓட்டங்களையும் 33 மகளிர் சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் 508 ஓட்டங்களையும் பெற்றுள்ளார். இருவகை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அவர் 3 அரைச் சதங்களைப் பூர்த்தி செய்துள்ளார்.
தென் ஆபிரிக்காவில் நடைபெறும் மகளிருக்கான இந்த முக்கியம் வாய்ந்த உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை சிறப்பாக செயல்பட வேண்டுமானால், மாதவி தனது அதிகபட்ச திறமையை வெளிப்படுத்துவது அவசியமாகும் என ஐசிசி குறிப்பிட்டுள்ளது.
ஹர்ஷிதா மாதவியைவிட 100% கிரிக்கெட் சுப்பர் ஸ்டார்கள் குழுவில் சாரா க்ளென் (இங்கிலாந்து), அயேஷா நசீம் (பாகிஸ்தான்), அமி ஹன்டர் (அயர்லாந்து), தஹிலா மெக்ரா (அவுஸ்திரேலியா), ரிச்சா கோஷ் (இந்தியா), சார்ளி டீன் (இங்கிலாந்து), தீப்தி ஷர்மா ( இந்தியா), அலிஸ் கெப்சி (இங்கிலாந்து), டார்சி ப்றவ்ண் (அவுஸ்திரேலியா) ஆகியோரும் பெயரிடப்பட்டுள்ளனர்.