ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்கள் பரவலாக வாழும் இடம், இந்தியாவின் அசாம் மாநிலம் ஆகும்.
ஏழாவது யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அங்கீகாரம் பெற்ற அசாம் மாநிலத்தில் அமைந்துள்ள காசிரங்கா தேசிய பூங்கா மற்றும் புலிகள் காப்பமானது உலக சுற்றுலா பயணிகளின் கேந்திர தளமாக வேகமாக மாறிவருகிறது.
2022ஆம் ஆண்டில் ஒக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலப்பகுதியில் பூங்காவுக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 3,226க்கும் அதிகமாக இருந்தது.
இது 2021ஆம் ஆண்டினை விட சுமார் 789 சதவீதம் அதிகமாகும்.
இந்த பூங்கா 2,613க்கும் மேற்பட்ட ஒற்றைக்கொம்பு இந்திய காண்டாமிருகங்களின் இருப்பிடம் மட்டுமல்ல, இது ரோயல் பெங்கால் புலிகள், ஆசிய யானைகள், காட்டு எருமைகள் என பல விலங்கினங்கள் மற்றும் 125க்கும் அதிகமான பறவையினங்களின் வாழ்விடமுமாக உள்ளது.
சமீபத்தில் அசாம் முதலமைச்சர் ஹேமந்த பிஸ்வா சர்மா, அழிந்துவரும் காண்டாமிருகங்கள் மீதான வேட்டையாடலை 2022ஆம் ஆண்டில் முற்றாக இல்லாதொழித்துள்ளதாகவும், இது சுமார் 45 ஆண்டுகளில் முதல் முறையாக நடந்திருப்பதாகவும் தெரிவித்தார்.
அசாம், காசிரங்கா தேசிய பூங்காவின் முக்கிய சுற்றுலா பருவகாலமாக ஒக்டோபர் முதல் மே வரையிலான மாதங்களை கருதலாம்.
வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு இந்தியாவின் வடகிழக்கு பகுதியிலேயே மிகவும் பிடித்த தளம் இந்த காசிரங்கா தேசிய பூங்கா தான்.
அந்த வகையில், இப்பூங்காவுக்கு 2021ஆம் ஆண்டில் 1,719 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட சுமார் 2.75 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர் என்றும் நடப்பு காலாண்டில் (2022 ஒக்டோபர் முதல் 2023 மே வரை) வெளிநாட்டுப் பயணிகள் உட்பட சுமார் 3.50 இலட்சம் அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை தரக்கூடும் என்றும் மூத்த இந்திய வன சேவை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலான வெளிநாட்டினர் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிலிருந்து வருபவர்கள் என்பதோடு, சமீப காலமாக மற்ற நாடுகளிலிருந்தும் சுற்றுலா பயணிகள் பூங்காவுக்கு வரத் தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.