மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு நாய்க்குட்டியை பரிசளித்த பொலிஸ்: நெகிழ வைக்கும் சம்பவம்
கனடா நாட்டில் மன இறுக்க நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு அந்நாட்டு பொலிசார் நாய்க்குட்டி ஒன்றினை பரிசாக அளித்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒட்டாவா நகரை சேர்ந்த அலெக்ஸ் பிரவ்ன் என்ற 13 வயது சிறுவன் தொடக்கம் முதல் மன இறுக்க நோயால் அவதியுற்று வந்துள்ளான்.
சிறுவனின் தாயார் அவனுக்கு ஒரு நாயை பரிசாக அளித்ததை தொடர்ந்து அதனை ஒரு நண்பன் போல் கண்ணும் கருத்துமாக கவனித்து வந்துள்ளான்.
சாஷா என்ற பெயருடைய அந்த நாயும் அலெக்சுடம் அன்பாக பழகி வந்துள்ளது.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் ஓண்டாரியா மாகாணத்தில் உள்ள Windsor நகருக்கு இந்த குடும்பத்தினர் சாஷாவுடன் சென்றுள்ளனர்.
அப்போது, உறவினர் வீட்டை விட்டு வெளியேறிய சாஷா திடீரென காணாமல் போயுள்ளது. நீண்ட நேரம் தேடியும் நாய் கிடைக்கவில்லை.
பின்னர், சில மணி நேரத்திற்கு பிறகு ஒரு கால்வாய் ஓரமாக சாஷா உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளது. சாலையில் சென்றபோது வாகனம் மோதி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
பிரியமான சாஷா தன்னை விட்டு பிரிந்ததை அறிந்து அலெக்ஸ் மனதளவில் வேதனைப்பட்டுள்ளான். ஏற்கனவே மன இறுக்க நோயால் பாதிக்கப்பட்ட அலெக்ஸால் இந்த இழப்பை தாங்க முடியவில்லை.
அலெக்ஸின் நிலை குறித்து தகவல் அறிந்த அந்நகர பொலிஸ் அதிகாரி ஒருவர் உடனடியாக நிதியுதவியை திரட்டியுள்ளார்.
பின்னர், உள்ளூர் பிராணிகள் விற்பனையாளரை அனுகிய அவர் குட்டி நாய் ஒன்றை விலைக்கு வாங்கி அலெக்ஸ் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
இது குறித்து பொலிஸ் அதிகாரி பேசியபோது, ‘சிறுவயதினருக்கு இழப்பை ஏற்றுக்கொள்ள முடியாது.
மேலும், அலெக்ஸ் மன இறுக்க நோயால் பாதிக்கப்பட்டுள்ளான் என்பதால் அவனுக்கு உதவி செய்வதற்காக தற்போது நாய்க்குட்டியை பரிசாக அனுப்பியுள்ளதாக’ தெரிவித்துள்ளார்.
தனது வீட்டிற்கு புதிதாக கிடைத்துள்ள நாய்க்குட்டியை பெற்றுக்கொண்டு அலெக்ஸ் மற்றும் அவனது குடும்பத்தினர் பொலிஸ் அதிகாரிக்கு நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.