200 பொலிஸாரை சிறைப்பிடித்துள்ள பயங்கரவாதிகள்!
குவெட்டா நகரின் ரியாப் சாலை பகுதியில் போபொலிஸ் பயிற்சி மையம் ஒன்று அமைந்துள்ளது. அதில் சுமார் 700 பொலிஸார் பயிற்சி பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், இன்று பாகிஸ்தான் நேரப்படி நள்ளிரவு தாண்டிய நிலையில் அந்த மையத்திற்குள் பயங்கரவாதிகள் புகுந்து திடீர் தாக்குதல் நடத்த துவங்கியுள்ளனர்.
இதில் 4 பயிற்சி பொலிஸார் காயம் அடைந்ததாகவும் 200க்கும் மேற்பட்ட பயிற்சி பொலிஸார் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகவும் முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.
மையத்திலிருந்து தப்பி வந்த ஒருவர் கூறுகையில், “பொலிஸ் மையத்தில் புகுந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிகளை கொண்டு சுட துவங்கினார்கள். அவர்கள் மையத்தின் பின்புறத்திலிருந்து உள்ளே நுழைந்தனர்.” என்றார்.
5 அல்லது 6 பயங்கரவாதிகள் பொலிஸ் மையத்திற்குள் இருக்கலாம் என சொல்லப்படுகிறது.
தகவல் அறிந்த பாகிஸ்தான் ராணுவத்தினர் மற்றும் அதிரடி படை பொலிஸார் சம்பவ இடத்தை சுற்றி வளைத்துள்ளனர்.
இதனிடையே பயங்கரவாதிகளுடன் ஏற்பட்ட மோதலின் முடிவில் 200 பொலிஸாரையும் ராணுவம் பத்திரமாக மீட்டுள்ளது. குறித்த மோதலில் 2 ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
மட்டுமின்றி 50 பொலிஸாருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. பயங்கரவாதிகளில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ராணுவம் உறுதி செய்துள்ளது. பாதுகாப்பு அதிகாரிகளால் குறித்த பகுதி சுற்றிவளைக்கப்பட்டுள்ளது எனவும், இரு கூட்டத்தினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்துள்ளது எனவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனிடையே காயமடைந்த பொலிஸார் மற்றும் ராணுவத்தினரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் என்று உள்விவகாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
.