சுட்டிக்காட்டும் அவதானிப்பு மையம்
ஸ்ரீலங்காவின் இன்றைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியில் அவரின் நரித் தந்திரமுகமாக ஸ்ரீலங்கா நீதித்துறை செயற்படுவதாக குற்றம் சுமத்தியுள்ள அனைத்துலக தமிழ் தேசிய அவதானிப்பு மையம், சர்வதேச விசாரணையை தவிர்க்கும் இந்த தந்திரத்தை கண்டு தமிழ் மக்கள் அகம் மகிழ்வாக ஸ்ரீலங்கா அரசு எண்ணத் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து அவதானிப்பு மையம் மேலும் கூறியுள்ளதாவது:
வவுனியா நீதிமன்றத் தீர்ப்பு
“இறுதிப் போரில் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ள எழிலன் உள்ளிட்ட முன்னாள் போராளிகள் ஸ்ரீலங்கா இராணுவம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும் என்று வவுனியா மேல் நீதிமன்றம் கடந்த 16ஆம் திகதி உத்தரவு வழங்கியுள்ளது. காணாமல் போனோரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு மீதான விசாரணைகள் குறித்த நாளில் இடம்பெற்றதுடன் இதற்கான பூர்வாங்க விசாரணைகள் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் இடம்பெற்றிருந்தது.
இராணுவத்திடம் குறித்த மனுதாரர்களின் உறவினர்கள் சரணடைந்து, இலங்கை அரச பேருந்தில் ஏற்றிச் செல்லப்பட்டனர் என்பதையும் சரணடைந்தவர்களின் பட்டியல் தம்மிடம் இருப்பதாக கூறிய இராணுவத்தினர் பின்னர் திருப்தியான பதிலை நீதிமன்றத்திற்கு தெரிவிக்கவில்லை என்றும் சரணடைந்தவர்கள் தொடர்பில் ஸ்ரீலங்கா இராணுவம் பொறுப்புக் கூறலை நிறைவேண்டும் என நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது என்றும் இந்த வழக்கில் முன்னிலையாகியுள்ள சிரேஷ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரத்ணவேல் அவர்கள் தெரிவித்துள்ளார்.
அகமகிழ முடியுமா?
மேற்குறித்த உத்தரவு கண்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஆறுதல் அடைந்த போதும் அதனைக் கண்டு அகம் மகிழ முடியாது. முதன் முதலில் ஸ்ரீலங்கா நீதிமன்றம் ஒன்று காணாமல் ஆக்கப்பட்டமையை ஏற்றுக்கொண்டுள்ளது. இதற்கான பொறுப்புக் கூறலை ஸ்ரீலங்கா இராணுவம் மேற்கொள்ள வேண்டும் என உத்தரவு இடப்பட்டுள்ளது. இதற்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பதின்மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் எனில் ஸ்ரீலங்காவில் இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழ் மக்கள் நீதிக்கு எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும் என்பதையும் காத்திருக்கத்தான் முடியுமா என்பதையும் இந்த உத்தரவு உணரத்தி நிற்கிறது.
தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமமானது என்ற நீதித்துறையின் வாசகத்திற்கு இணங்கள ஈழத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக போராடிய எத்தனையோ தாய்மார் இந்தச் செய்தியைக் கூட கேட்காமல் தங்கள் உயிரை விட்டுள்ள கொடுமையையும் நாம் அவதானிக்க வேண்டும். ஸ்ரீலங்கா அரசுக்குச் சார்பான அரசியல்வாதிகளும் அரச சார்பு ஊடகங்களும் ஸ்ரீலங்காவில் நீதியான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அகம் மிகழ்வது போல் நடிக்கும் நிலையில் ஈழ மக்களின் உண்மை மனநிலையும் களநிலையும் இதுவாகும்.
இனவழிப்பின் அச்சாணியே நீதித்துறை
ஸ்ரீலங்கா அரசின் இனவழிப்புக் கொள்கையின் அச்சாணியாக நீதித்துறையே செயற்படுகின்றது. ஸ்ரீலங்கா அரசின் அரசியலமைப்புச் சட்டம் மற்றும் ஸ்ரீலங்காவின் பேரினவாத அரசியல் தலைவர்களை பாதுகாக்கும் வேலையை நீதித்துறை செய்து வருகின்றது. அத்துடன் ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராக எழுதப்பட்ட நிலையிலும் எழுதப்படாத நிலையிலும் இனவழிப்பு சார்ந்த நடவடிக்கைகளை அச்சாணியாக நீதித்துறை செயற்படுத்தி நிற்கின்றது.
ஸ்ரீலங்காவைப் பொறுத்தவரையில் நீதி என்பது அரசியலாகவே கையாளப்படுகிறது. நீதித்துறை என்பது சுயாதீனத்தை இழந்து சிங்கள பௌத்த பேரினவாதத்தை காக்கும் அரணாக செயற்படுகின்றது. ஸ்ரீலங்கா நீதித்துறை சுயாதீனமாகவும் நீதியாகவும் இருந்திருந்தால், ஈழத் தமிழ் மக்கள் பல லட்சம் பேர் அழிக்கப்பட்டிருக்க மாட்டார்கள். அத்துடன் சிங்களப் பேரினவாதம் இல்லாத பட்சத்தில் ஈழத் தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்திப் போராட வேண்டிய நிலையும் ஏற்பட்டிருக்காது என்பதையும் சுட்டிக்காட்டுகிறோம்.
தமிழர்களை ஏமாற்றும் தந்திரம்
2000ஆம் ஆண்டு மிருசுவில் பகுதியில் அப்பாவித் தமிழர்கள் எட்டுப் பேரை படுகொலை செய்த கொலைக் குற்றவாளி சுனில் ரத்னாயக்காவுக்கு இதே ரணில் பிரதமராக இருந்த போது 2015 யூன் 25 அன்று மரண தண்டனை வழங்கி அன்றைய சூழலில் நீதித்துறை சர்வதேசத்தையும் தமிழரையும் ஏமாற்ற நாடகம் ஆடியது. எனினும் 2020ஆம் ஆண்டு மார்ச் 26ஆம் திகதி கோத்தபாய ராஜபகச்வின் ஆட்சிக் காலத்தில் குறித்த வழக்கில் போதிய ஆதரமில்லை எனக் கூறப்பட்டு சுனில் ரத்னாயக்காவுக்கு பொதுமன்னிப்பும் விடுதலையும் அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வு ஒன்றே ஸ்ரீலங்கா நீதித்துறையின் நாடகத்திற்கும் ரணில் ஆட்சியில் நீதித்துறை போடும் தந்திர முகத்திற்கும் சான்றாகும்.
தற்போது ஸ்ரீலங்கா அரசு பெரும் பொருளாதார பின்னடைவை சந்தித்து வருகின்றது. அத்துடன் சர்வதேச சூழலில் பொறுப்புக் கூறல் குறித்த நெருக்கடியும் நிலவுகின்றது. இந்த நிலையில் தமிழ் கட்சிகளை சந்தித்துள்ள வேளையில் சுமந்திரன் தலைமயிலான கூட்டமைப்பு ஆதரவு வழங்கிய சூழலில் மீண்டும் தமிழ் மக்களை ஏமாற்றி அவர்களின் ஆதரவைப் பெற்று நெருக்கடிகளில் இருந்து மீளவே ரணில் தந்திர முகமாக நீதித்துறை செயற்பட்டமையின் வெளிப்பாடாகவே இந்த தீர்ப்பை கருதுகின்றோம்.
உள்ளக விசாரணைக்கான பொறியா?
ஈழத்தில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்கு சர்வதே விசாரணையை ஈழ மக்கள் கோரி வருகின்றனர். குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பது தமக்கு தெரிய வேண்டும் என்றும் காணாமல் போனோர் அலுவலகத்தை தாம் ஏற்கப் போவதில்லை என்றும் சர்வதேச விசாரணை வழியாகவே தமக்கு நீதி கிடைக்கும் உன்றும் அறுதியும் உறுதியுமாக போராடுகின்றனர்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களின் கவனத்தை திசை திருப்பி உள்ளக விசாரணையை ஸ்ரீலங்கா அரசு நடத்தும் என்ற மாயத் தோற்றத்தை உருவாக்கவே இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதை ஈழத் தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் தெளிவாக அறிவார்கள். எனவே, ஸ்ரீலங்கா அரசு இத்தகைய தந்திர முயற்சிகளை கைவிட்டு சர்வதே விசாரணைக்கு வர வேண்டும். அதேபோன்று சர்வதேசமும் ஸ்ரீலங்காவின் தந்திரங்களுக்கு ஏமாந்து மீண்டும் மீண்டும் தமிழ் மக்களை அழிப்பதற்கு துணைபோகாமல் சர்வதேச விசாரணை வழி நீதியை நிலைநாட்ட முன்வர வேண்டும் என்பதை பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில் விநயமாக வலியுறுத்தி நிற்கிறோம்…” என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.