சுன்னாகம் பகுதியில் பொலிஸார் மீது வாள்வெட்டு. ரவுடிகளின் அட்டகாசம்!
யாழ் சுன்னாகம் பகுதியில் வாள் வெட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாகவும் இதனால் அங்கு சற்று பதற்ற நிலை நிலவுவதாகவும் கூறப்படுகின்றது.
இந்த சம்பவம் இன்று பகல் 2.30 மணிக்கு யாழ் பிரபல தனியார் பல்பொருள் அங்காடி ஒன்றிக்கு முன்னால் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் இருவர் மீதே வாள் வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தாக்குதலில் நிமல் பண்டார (52) மற்றும் பி.எஸ். நவரத்ன எனப்படும் பொலிஸார் இருவர் வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ள நிலையில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
மேலும் குறித்த இருவரும் பொலிஸ் புலனாய்வு பிரிவைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்களுக்கு கைகளிலும் தலையிலும் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆறு பேருடன் வந்த குழு ஒன்றின் மூலமாகவே இந்த வாள்வெட்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
இதேவேளை, வர்த்தக நிலைய உரிமையாளர் ஒருவர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு அவரது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 35,000 ரூபாய் பணம் கொள்ளையிட்டு செல்லப்பட்டுள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளிவந்துள்ளன.
மேலும், இதன் காரணமாக கொக்குவில், சுன்னாகம் பிரதேசப் பகுதியில் சிறப்பு பொலிஸ் அதிரடி படையினர் இறக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ் பல்கலைக்கழக மாணவர்களான கஜன், சுலக்ஷன் ஆகியோர் கடந்த வியாழக்கிழமை இரவு பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தனர். முதலில் குறித்த சம்பவத்தினை விபத்து என கூறி பொலிஸார் மறைக்க முற்பட்ட போது மரண அறிக்கை அவர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டதை உறுதி செய்திருந்தது.
பின்னர் குறித்த சம்பவம் பல்வேறு விதமான சர்ச்சையினை ஏற்படுத்தியிருந்ததோடு சந்தேகத்தின் பேரில் 5 பொலிஸாரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியல் படுத்தப்பட்டிருந்தனர். இதன் காரணமாக யாழில் கடும் பதற்ற நிலைகள் தோன்றியிருந்ததோடு, கடந்த தினங்கள் யாழ்.நகர பகுதிகளில் பொலிஸாரின் நடமாட்டம் முழுமையாக குறைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.