கொழும்பு – மட்டக்குளி , தொட்டவத்த புனித மெதடிஸ் வித்தியாலயத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மிகவும் வறுமை குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி கற்கும் இந்த பாடசாலையை மூடுவதற்கு இடமளிக்க முடியாது என பாடசாலை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
இப்பாடசாலையில் 60 மாணவர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் சுமார் 35 மாணவர்கள் தினமும் பாடசாலைக்கு வருகை தருகின்றனர்.
இப்பாடசாலையின் அதிபரை இடமாற்றம் செய்ததன் பின்னர், பாடசாலையை நிர்வகிக்க முடியாமலிருப்பதாகக் குறிப்பிட்டு அதனை மூடுவதற்கு கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இங்குள்ள மாணவர்களை வேறு பாடசாலைகளில் இணையுமாறு கூறப்படுகின்ற போதிலும் , அவர்களின் கல்வி தகைமை குறைந்த மட்டத்தில் காணப்படுவதால் அவர்களுக்கு வேறு பாடசாலைகளில் அனுமதி கிடைப்பது சிரமமாகவுள்ளது.
அண்மையில் பாடசாலைக்கருகில் காணப்பட்ட ஆசிரியர் விடுதிகள் உடைத்து தகர்த்தப்பட்டு விற்கப்பட்டுள்ளன. தற்போது இந்த பாடசாலையை கல்வி காரியாலயமாக மாற்றவுள்ளதாகக் கூறுகின்றனர். இது பொறுத்தமற்ற செயற்பாடாகும். இந்த இடத்தை விற்பனை செய்வதற்கான சூழ்ச்சிகளே இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
இது தொடர்பில் பிரதேச செயலகத்தின் ஊடாக மாவட்ட அபிவிருத்தி குழுவிற்கு அறிவிக்கப்பட்டதையடுத்து , பாடசாலை மூடப்பட மாட்டாது என உறுதியளிக்கப்பட்டது. எனினும் தற்போது அந்த வாக்குறுதியை மீறி மாணவர்களை செல்லுமாறு கூறுகின்றனர். இந்த அநீதியை தடுப்பதற்கு உரிய தரப்பினர் ஒத்துழைக்க வேண்டும் என்றனர்.