தனது குடும்பத்தினர் வெளிநாடு செல்ல முயன்றபோது அவர்கள் பயணித்த விமானம் திசை திருப்பப்பட்டு, அக்குடும்பத்தினர் விமானத்திலிருந்து இறக்கப்பட்டுள்ளனர் என ஈரானின் புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர் அலி தாயி திங்கட்கிழமை (26) தெரிவித்துள்ளார்.
53 வயதான அலி தாயி, ஈரானின் பெரும் புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர் ஆவார். சர்வதேச போட்டிகளில் அவர் 109 கோல்களை புகுத்தினார். இது நீண்டகாலமாக உலக சாதனையாக இருந்தது. பின்னர் கிறிஸ்டியானொ ரொனால்டோவினால் அச்சாதனை முறியடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
1998 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தில் அலி தாயி பங்குபற்றிய ஈரானிய அணி, அமெரிக்காவை வென்றது.
மாஷா அமீனியின் மரணத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை தான் ஆதரித்ததால், ஈரானிய அதிகாரிகளால் தான் இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக அலி தாயி கூறுகிறார்.
அலி தாயியின் மனைவியும், மகளும் தெஹ்ரானின் இமாம் கொமேய்னி விமான நிலையத்திலிருந்து துபாய் நோக்கி புறப்பட்ட மாஹன் எயார் பிளைட் விமானத்தில் பயணம் செய்தனர் என ஐ.எஸ்.என்.ஏ. செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
ஆனால், அவ்விமானம் திசைதிருப்பப்பட்டு, ஈரானின் கிஷ் தீவிலுள்ள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டு, அலி தாயியின் மனைவியும் மகளும் விமானத்திலிருந்து இறக்கப்பட்டதாக ஐ.ஆர்.என்.ஏ. செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஐ.எஸ்.என்.ஏ. விடம் அலி தாயி கூறுகையில், எமது மகளும் மனைவியும் விமானத்திலிருந்து இறக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கைது செய்யப்படவில்லை.
ஆவர்கள் நாட்டிலிருந்து வெளியேற தடை விதிக்கப்பட்டால், கடவுச்சீட்டு பொலிஸ் முறைமை அதை வெளிப்படுத்தியிருக்க வேண்டும். இது தொடர்பாக எவரும் எனக்கு பதிலளிக்ககைவில்லை. இவ்விடயங்களுக்கான காரணம் தெரியவில்லை.
அவர்கள் ஒரு பயங்கரவாதியை கைது செய்ய விரும்பினார்களா? எனது மனைவியும் மகளும் துபாய் சென்று சில நாட்களின் பின் வரவிருந்தனர்’ எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒக்டோபர் மாதம் வெளிநாட்டிலிருந்து ஈரானுக்கு அலி தாயி திரும்பிய பின்னர் அவரின் கடவுச்சீட்டு பறிமுதல் செய்யப்பட்டது. எனினும் சில நாட்களின் பின்னர் அது மீண்டும் ஒப்படைக்கப்பட்டது.
தெஹ்ரானிலுள்ள அவரின் தனது ஆபரண விற்பனை நிலையம் மற்றும் உணவகம் ஆகியன கடந்த டிசெம்பர் மாதம் சீல் வைக்கப்பட்டன.
ஆர்ப்பாட்டங்களுக்கு எதிரான அதிகாரிகளின் ஒடுக்குமுறை காரணமாக, தான் கத்தார் உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு செல்லவில்லை என அலி தாயி தெரிவித்துள்ளார்.